(எம்.ஆர்.எம்.வசீம்)

வைத்தியர்களின் ஆலோசனையின் பிரகாரம் நாட்டை 14 நாட்களுக்கு பூரணமாக முடக்கி  கொவிட் பரவலை கட்டுப்படுத்தவேண்டும்.

மாறாக பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் மக்களின் உயிர்களை பாதுகாக்க முடியாது. அத்துடன் முறையான வேலைத்திட்டத்துடன் மேற்கொள்ள தவறியதனாலே அனைத்து துறைகளும் செயலிழந்து மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

நாட்டு நிலைமை தொடர்பாக கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்.

கொவிட் வைரஸை  கட்டுப்படுத்த அரசாங்கம்  நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அதனை முறையாக செயற்படுத்த தவறியமையால் நாடு பாரிய அனர்த்தத்துக்கு முகம்கொடுத்து வருகின்றது. மக்களுக்கு தேவையான நிவாரணங்களை பெற்றுக்கொடுத்து,

 

அத்தியாவசிய சேவைகளுக்காக முறையான வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொண்டு நாட்டை 14நாட்களுக்கு பூரணமாக முடக்கவேண்டும் என்றே வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

நாங்களும் இந்த விடயத்தை அரசாங்கத்துக்கு தெரிவித்திருக்கின்றோம். அவ்வாறு இல்லாமல் பயணக்கட்டுப்பாட்டை விதித்து மக்களின் உயிர்களை பாதுகாக்க முடியாது.

அத்துடன் கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ள அரசாங்கத்துக்கு முடியாமல் போயிருக்கின்றது. நாட்டில் 18வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் ஒருகோடி 50இலட்சம்பேர் இருக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் 10 இலட்சம் தடுப்பூசிகளை கொண்டுவந்தால், தடுப்பூசி ஏற்றுவதில் பிரச்சினை ஏற்படுவது சாதாரண விடயமாகும்.

தற்போது தடுப்பூசிக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் 200மில்லியன் டொலர்களை கடந்த வருடம் ஒதுக்கி,  தடுப்பூசிகளை பெற்று, கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மக்களுக்கு ஏற்றியிருந்தால், நாட்டை முடக்கவேண்டிய தேவை இருக்காது. அவ்வாறான நிலைமையில் பயணக்கட்டுப்பாடு விதித்து நிலைமையை கட்டுப்படுத்த முடிந்திருக்கும்.

மேலும் நாடு கொவிட் தொற்றில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சீரற்ற காலநிலை காரணமாக 19 உயிர்கள் பலியாகி இருக்கின்றன.

சாதாரண வெள்ளப்பெருக்கில் இவ்வாறு உயிரிழப்பு இடம்பெற்றிருப்பது, அரசாங்கத்தின் முன்னேற்பாடு இல்லாமையே இதற்கு காரணமாகும். 

2017 இல் நாட்டில் இடம்பெற்ற பாரிய வெள்ள அனர்த்தத்தின்போது நாங்கள் கிராம மட்டத்தில் முன்னேற்பாடுகளை மேற்கொண்டு எச்சரிக்கையான பிரதேசங்களில் இருந்து மக்களை முன்கூட்டியே அகற்றியிருந்தோம்.

அதேபோன்று வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பாதிக்கப்பட்ட வியாபார நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகளை மீள கட்டியெழுப்ப போதுமான பண உதவிகளை செய்துகொடுத்தோம். 

அதற்காக ஆசிய அபிவிருத்து வங்கி நன்கொடையாக பல டொலர் மில்லியன்களை எமது அரசாங்கத்துக்கு வழங்கி இருந்தது. சர்வதே நாடுகள் மேற்கொண்டுவந்த சிறந்த உறவே இதற்கு காரணம்.ஆனால் அவ்வாறான உதவிகள் தற்போது கிடைப்பதில்லை.

அத்துடன் மலேரியா நோயை கட்டுப்படுத்த வீடு வீடாக சென்று தடுப்பூசி ஏற்றிய எமது நாட்டில், சிறந்த நிரவாக கட்டமைப்பு இருக்கின்றது. 

அவ்வாறான நடவடிக்கைகளை நாட்டு மக்களின் நன்மைக்காக அரசாங்கம் ஏன் செயற்படுத்தால் இருக்கின்றது என்பது எமக்கு தெரியாமல் இருக்கின்றது. 

அத்துடன் இவை அனைத்துக்கும் அனுபவமுள்ள தலைமைத்துவம் அவசியமாகும். அது இல்லாமையே நாட்டின் அனைத்து துறைகளும் செயலிழந்து மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்றார்.