(இராஜதுரை ஹஷான்)

கொழும்பு  துறைமுகத்தின் கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான கப்பல் விவாகாரத்தை கொண்டு  அரசாங்கத்தை பலவீனப்படுத்த எதிர் தரப்பினர் முயற்சிக்கிறார்கள்.

எவ்வாறிருப்பினும் இவ்விபத்தினால் கடல் வளத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை மதிப்பீடு செய்ய முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

Articles Tagged Under: டிலான் பெரேரா | Virakesari.lk

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொழும்பு துறைமுகத்தின் கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளாகியுள்ள கப்பல் விவகாரத்தை எதிர்தரப்பினர் தங்களின் அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். துரதிஷ்டவசமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்துக்கு  கடற்படை பொறுப்பு கூற வேண்டும் என எதிர்தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதி வசம் உள்ளது. கடற்படை பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ளது.

இவ்வாறான நிலையில் கடற்படையை குற்றஞ்சாட்டி ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் பலவீனப்படுத்த  எதிர்தரப்பினர் பல குற்றச்சாட்டுக்களை தற்போது முன்வைக்கிறார்கள்.

இந்த விபத்து காரணமாக நாட்டின் கடல் வளம் பாதிக்கப்பட்டுள்ளது. கடல்வாழ் உயிரினங்களும் இறந்துள்ளன. இவை குறித்து உரிய  சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.   

விபத்துக்குள்ளான  கப்பல் நிறுவனத்திற்கு எதிராக சர்வதேச சட்டத்திற்கு அமைய சட்ட நடவடிக்கை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே போலியாக குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை எதிர்தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

சைனோபார்ம் தடுப்பூசியை சீன நிறுவனத்துடன் இணைந்து தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் தற்போது சட்டமாதிபர் திணைகளத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

இவ்வருடத்திற்குள் தேசிய மட்டத்தில் சைனோபார்ம் தடுப்பூசியை உற்பத்தி செய்ய எதிர்பார்த்துள்ளோம். கொவிட்-19 வைரஸ் தாக்கத்தில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து பொறுப்புடன் செயற்பட்டுள்ளது என்றார்.