(எம்.மனோசித்ரா)
புதிய களனிப் பாலத்திலிருந்து அத்துருகிரிய வரையான நான்கு வழிப்பாதைகளுடன் கூடிய தூண்களிலான அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிப்பின் போது பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு வீடுகளைப் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

புதிய களனிப் பாலத்தில் இருந்து அத்துருகிரிய வரையான நான்கு வழிப்பாதைகளுடன் கூடிய தூண்களிலான அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

குறித்த கருத்திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்டுள்ள சட்டவிரோத வதிவிடக் குடும்பங்கள், சட்டவிரோத வதிவிட உப குடும்பங்கள் மற்றும் 06 பேர்ச்சஸ்களுக்குக் குறைவான காணிகளில் வசிக்கும் குடும்பங்கள் மற்றும் தெமட்டகொட விளையாட்டரங்குக்காக ஒதுக்கப்பட்டுள்ள காணியில்  சட்டவிரோதமாக  வசிக்கும்  குடும்பங்கள் உள்ளிட்ட 1,100 குடும்பங்களுக்காக மாற்று வீட்டு வசதிகளை வழங்கும் தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய நகர அபிவிருத்தி அதிகாரசபை மூலம் நடைமுறைப்படுத்தப்படும் கொலன்னாவ, ஹேனமுல்ல மற்றும் மாளிகாவத்த போன்ற வீடமைப்புத் திட்டங்களில் குறித்த 1,100 குடும்பங்களுக்கான வீடுகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.