(நா.தனுஜா)
இலங்கையை சர்வதேச  சமூகத்துடன் ஒன்றிணைத்துச் செயலாற்றக்கூடிய, ஆசியப்பிராந்தியத்தில் இந்தியாவுடன் ஒன்றிணைந்து செயற்படக்கூடிய தலைமைத்துவமொன்று தற்போது எமது நாட்டிற்குத் தேவைப்படுகின்றது. அத்தகைய தலைமைத்துவத்திற்குத் தேவையான அனைத்துத் தகுதிகளும் ரணில் விக்கிரமசிங்கவிடம் காணப்படுகின்றன. எனவே நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் பேரழிவிலிருந்து அதனை மீட்டெடுப்பதற்காகவும் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைப்பதற்காகவுமே ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றம் செல்வதற்குத் தீர்மானித்திருக்கிறார் என  ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

எமது நாடு தற்போது பல்வேறு விதமான அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சுமார் ஒருவருடத்திற்கும் அதிகமான காலம் எமது நாடும் ஏனைய உலகநாடுகள் அனர்த்த நிலையொன்றை எதிர்கொண்டுள்ளன. அதேபோன்று வெள்ளப்பெருக்கின்ற காரணமாக தற்போதுவரை 19 பேர் உயிரிழந்திருக்கின்றார்கள். மேலும் கொழும்புத்துறைமுகத்திற்கு அமையில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலைத் தொடர்ந்து தற்போது எமது மீன்பிடித்துறை, சுற்றுலாத்துறை என்பன பாரிய நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதுடன் வருமானத்திலும் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது.

ஐக்கிய தேசியக்கட்சியின்  ஊடாக  கடந்த காலங்களில் தொடர்ச்சியாகக் கூறப்பட்டுவந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியதா என்பது குறித்து சந்தேகம் ஏற்படுகின்றது. குறிப்பாக ஒருவருடத்திற்கும் அதிகமான காலம் ஓய்வின்றிப் பணியாற்றும் சுகாதாரப்பிரிவினர் உள்ளடங்களாக முன்களப்பணியாளர்களுக்கு 25,000 ரூபா விசேட கொடுப்பனவை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினோம். அதேபோன்று கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு 25 இலட்சம் பெறுமதியான காப்புறுதிக்கொடுப்பனவைப் பெற்றுக்கொடுக்குமாறும் வலியுறுத்தினோம். 

மேலும்,  நாட்டை முழுமையாக முடக்குமாறு சுகாதாரத்தரப்பினரால் கோரப்பட்ட போதிலும், அரசாங்கம் நாடளாவிய ரீதியில் அதிதீவிரப் பயணக்கட்டுப்பாடுகளையே விதித்தது. இதனூடாக மனித உயிர்களைப் பாதுகாத்துக்கொள்ளமுடியும் என்று நாம் கருதவில்லை. மாறாக தற்போது தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மரணங்களின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக அதிகரித்துவருவதுடன் நாடு பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது என்றார். 

மேலும் தற்போதைய நெருக்கடி நிலையில் ரணில் பாராளுமன்றத்திற்குச் செல்லவேண்டும் என்பதே கடந்த 5 மாதகாலமாக கட்சியின் அனைத்துத்தரப்பினரதும் கோரிக்கையாகக் காணப்பட்டது. அதன்படி அவரைப் பாராளுமன்றம் அனுப்புவதற்கான தீர்மானம் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. 

எமது நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்கு அனுபவமும் செயற்திறனும் உள்ள, இலங்கையை சர்வதேச சமூகத்துடன் ஒன்றிணைக்கக்கூடிய, இலங்கை தொடர்பில் சிறந்த தெளிவைக்கொண்ட, ஆசியப்பிராந்தியத்தில் இந்தியாவுடன் ஒன்றிணைந்து செயற்படக்கூடிய அரசியல் தலைவரொருவரின் தேவை காணப்படுகின்றது. அந்த அனைத்துத்தகுதிகளும் ரணில் விக்கிரமசிங்கவிடம் காணப்படுகின்றது என்றார்.