இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார்.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் உரையாற்றினார்.

அதன் போது அவர் பேசியதாவது,

'மற்ற நாடுகள் போல இந்தியாவும் கடினமான சூழலில் போராடி வருகிறது. இந்த போராட்டத்தில் நமக்கு பிரியமான ஏராளமானவர்களை இழந்துள்ளோம். 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகப்பெரிய பாதிப்பு இது. ஏப்ரல், மே மாதங்களில் இருந்து ஒக்சிசன் தேவை கடுமையாக அதிகரித்தது.

ஒக்சிசனை கொண்டு வர விமானம், புகையிரதம், என அனைத்து போக்குவரத்து சேவைகளும் பயன்படுத்தப்பட்டன. நாட்டின் எந்த மூலையில் ஒக்சிசனை உற்பத்தி மேற்கொள்ளப்பட்டாலும், அது நாட்டின் எந்தவொரு பகுதிக்கும் சென்றடைய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஒக்சிசன் உற்பத்தியும் இதுவரை இல்லாத வகையில் கடுமையாக அதிகரிக்கப்பட்டன. அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி தேவை ஏற்பட்டதையடுத்து தடுப்பூசி உற்பத்தியை இதுவரை இல்லாத வகையில் அதிகரித்துள்ளோம்.

இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி இல்லை என்றால் நிலைமையை யோசித்துப் பாருங்கள். இந்தியாவில் தயாரிக்கப் பட்டுள்ள தடுப்பூசிகள் பலரது உயிரை காப்பாற்றியுள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே ஆயுதம். இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட இரண்டு தடுப்பூசிகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

தடுப்பூசி உற்பத்தியில் எந்த நாட்டைக் காட்டிலும்,நாம் பின்தங்கிய நிலையில் இல்லை. நம் விஞ்ஞானிகள் இதை நிரூபித்துக் காட்டிவிட்டார்கள். தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அரசு அனைத்து உதவிகளையும் வழங்கியது. வரும் நாள்களில் தடுப்பூசி விநியோகம் மேலும் அதிகரிக்கப்படும். மேலும் இறுதிக்கட்ட ஆய்வு நிலையில் மூன்று தடுப்பூசிகள் உள்ளன.

அவை விரைவில் நடைமுறைக்கு வர உள்ளன. தடுப்பூசியாக அல்லாமல் மருந்தை உட்கொள்ளும் வகையிலும் தடுப்பு மருந்து வரவுள்ளது. எனவே கொரோணா தடுப்பூசிக்கான தட்டுப்பாடு விரைவில் தீரும்.

மாநில அரசுகள் நாங்களே என் தடுப்பூசியை தயாரிக்கக் கூடாது என்று கேள்வி எழுப்புகிறார்கள். மாநில அரசுகளுக்கு வகுத்துள்ள தடுப்பூசி கொள்கையையே மத்திய அரசு பின்பற்றுகிறது. அவர்களது கோரிக்கைக்கு ஏற்ப அவ்வப்போது கொள்கைகளில் மாற்றம் செய்கிறோம். கடந்த மே முதல் மாநில அரசுகளுக்கு தடுப்பூசி கொள்கையின் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் இறுதி வரை மட்டுமே தடுப்பூசிகளை நாங்கள் விநியோகித்து வந்தோம்.

தடுப்பூசி விநியோகத்திற்கான மாநில அரசுகளின் 25 சதவீத பங்கையும் மத்திய அரசே ஏற்கும். ஜூன் 21ஆம் திகதி முதல் அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாகவே தடுப்பூசி விநியோகிக்கப்படும். நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளின் 75 சதவீதத்தை மத்திய அரசே கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு விநியோகிக்கும்.

மீதமுள்ள 25 சதவீத தடுப்பூசிகளை தனியார் வைத்தியசாலைகள் கொள்முதல் செய்து கொள்ளலாம். கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டிற்கு விரைவில் தீர்வு காணப்படும்.' என்று கூறினார்.