(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 2 இலட்சத்தைக் கடந்துள்ள நிலையில் , மரணங்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துச் செல்கிறது.

அதற்மைய இன்று திங்கட்கிழமை 46 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. 

இம் மரணங்கள் மேம் மாதம் 17 ஆம் திகதி முதல் கடந்த 5 ஆம் திகதி வரை பாதிவாகியவையாகும்.

வெலிகம, கிண்ணியா, வேயங்கொடை, களுத்துறை, ஹட்டன், அக்மீமன, கிந்துதொட்ட, காலி, யக்கலமுல்ல, கொழும்பு-14, கொழும்பு-15, அகலவத்தை, மீரிகம, புறக்கோட்டை, ரத்கம, நாகொட, ஹிக்கடுவை, உடதலவின்ன, அம்பேபுஸ்ஸ, மட்டக்களப்பு, அல்கம, பொரளை, நுவரெலியா, அவிசாவளை, நிட்டம்புவ, முறுதலாவை, அக்குறனை, கல்எலிய, கெலிஓயா, ஓபநாயக்க, வவுனியா, பம்பலபிட்டி, கம்பஹா, நாவுத்துடுவ, பசறை, பிலிமத்தலாவை, குருதெனிய மற்றும் கம்பளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 23 ஆண்களும் , 23 பெண்களும் இவ்வாறு கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 20 - 99 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பதோடு , 13 பேர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதற்கமைய நாட்டில் பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 1742 ஆகும்.

இந்நிலையில் இன்று திங்கட்கிழமை 2,610 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இதுவரையில் நாட்டில் 207 943 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 167 304 பேர் தொற்றிலிருந்து முற்றாக குணமடைந்துள்ளதோடு , 38 247 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் அண்மையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பல பகுதிகள் இன்று திங்கட்கிழமை அதிகாலை 4 மணி முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இரத்தினபுரி, கம்பஹா, நுவரெலியா, திருகோணமலை, மாத்தளை, முல்லைதீவு, யாழப்பாணம், கொழும்பு, மட்டக்களப்பு, களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பகுதிகளே இன்று காலை முதல் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.