(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு  நாடு தழுவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வெளிநாட்டு சுற்றுலாப்பிரயாணிகளுக்கு மாத்திரம் தேசிய வன பூங்காக்களை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளமை முறையற்ற செயற்பாடாகும்.

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை முழுமையாக இல்லாதொழிக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது. கொவிட் விவகாரம்  முதனிலை வியாபாரமாகிவிட்டது என பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

சூடுபிடிக்கும் விகாரம் : தெரிவுக்குழுவிலிருந்து காவிந்த விலகல் | Virakesari .lk

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு நாடு தழுவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.  மக்கள் அத்தியாவசிய பொருட்களை  பெற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு பயணத்தடை  தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.

பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள காலக்கட்டத்தில்  பொது மக்கள் அத்தியாவசிய பொருட்களை முறையாக பெற்றுக் கொள்ள  எவ்வித திட்டங்களும் செயற்படுத்தப்படவில்லை.

கொவிட்-19 தடுப்பூசி விவகாரம் அரசாங்கத்தின் முதனிலை வியாபாரமாகி விட்டது. தடுப்பூசி செலுத்தல் விடயத்தில் அரசியல்வாதிகளின் தலையீடு நேரடியாக காணப்படுகிறது.

60 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசஸ்ரீ முழுமையாக வழங்கப்பட்டிருந்தால் கொவிட் வைரஸ் தாக்கத்தினால் அதிக மரணங்கள் பதிவாகியிருக்காது .

கொவிட் தடுப்பூசி விடயத்தில் அரசாங்கம் முறையான திட்டத்தை வகுக்கவில்லை என ஆளும் தரப்பினரே குற்றஞ்சாட்டுகிறார்கள்.

 நாடு தழுவிய ரீதியில்  பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில்  சுற்றுலாப்பிரயாணிகளுக்காக  விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது.   

பிரான்ஸ் நாட்டு பயணிகளுக்கு மாத்திரம்  பார்வையிட யால மற்றும் உடவலளை தேசிய பூங்காக்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் சுகாதார ரீதியில் பெரும் பாதிப்பை எதிர்க் கொண்டுள்ள நிலையில்  அரசாங்கம்  சுற்றுலாப்பிரயாணிகளுக்கு சிறப்பு சலுகை வழங்குவது பொறுத்தமற்றதாகும்.

 கொவிட்-19 வைரஸ் தாக்கத்தில் மூல பரவல் குறித்து இன்றும் சர்ச்சை காணப்படுகிறது. உக்ரைன் நாட்டு சுற்றுலாப்பிரயாணி ஊடாக  கொவிட்-19  வைரஸ் இரண்டாம் அலையாக தாக்கம் செலுத்தியது என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதனை ஆளும்   இராஜாங்க அமைச்சர்   பாராளுமன்றில் பகிரங்கமாக குறிப்பிட்டார். இவ்வான பின்னணியில் மீண்டும் சுற்றுலாப்பிரயாணிகளுக்காக  பொது  இடங்களை திறப்பது அபாயகரமானது.

 நாட்டு மக்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்த அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும். கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது. கொவிட் பாதுகாப்பு சட்டங்களை செயற்படுத்தி அதனூடாக அரசாங்கம் தன்னிச்சையாக செயற்படுகிறது..

கொழும்பு துறைமுகத்தின் கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளாகியுள்ள எம். வி. எக்பிரஷ் பேர்ல் கப்பலினால் சமுத்திர வளத்திற்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளன.

இவ்விபத்துக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் யார் என்பது இன்று போட்டித்தன்மையாகவுள்ளது.  கடல்வளம் பாதிக்கப்பட்டுள்ளமைக்கு அரசாங்கம் முழு பொறுப்பினை ஏற்க வேணடும் என்றார்.