(எம்.எப்.எம்.பஸீர்)
யால மற்றும் உட வளவ தேசிய சரணாலயங்களை நாளை 8 ஆம் திகதி திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமல வீர திஸாநாயக்க தெரிவித்தார்.

'எயார் பபள்' திட்டத்தின் கீழ் நாட்டிற்கு வருகை தந்துள்ள பிரான்ஸ் கடற்படையினருக்காக மட்டும் இந்த சரணாலயங்கள் நாளை 8 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

அன்றைய தினம் மாத்திரம், சரணாலயத்தை திறக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் இது குறித்து வினவிய போது தெரிவித்தார்.

குறித்த பிரான்ஸ் கடற்படையினரின் சுற்றுலாப்பயணங்கள் அனைத்தும் சுற்றுலாத்துறை அமைச்சின் மேற்பார்வையில் இடம்பெறுவதாக அவர் கூறினார்.

இது தொடர்பில் கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வாவை கேட்ட போது, பிரான்ஸ் கடற்படை குழுவொன்று நாட்டுக்குள் வருவது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் அவர்களுடன் எந்த பயிற்சி நடவடிக்கைகளும் ஒழுங்கு செய்யப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.