(எம்.மனோசித்ரா)
செவ்வாய்கிழமை  நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீவிபத்து தொடர்பில் விசாரணை செய்வதற்காக தெரிவுக்குழுவொன்றை நியமிக்க வேண்டும். ஜூலை முதல் வாரத்தில் அதன் அறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அத்தோடு தீப்பரவலால் இலங்கை  கடற்பரப்பிற்கு  பாரிய பாதிப்பு ஏற்படப் போவதாக சர்வதேச  கடற்சூழல் பாதுகாப்பு அமைப்பினால் அறிவிக்கப்பட்ட போதே  ஜனாதிபதி, பிரதமர், 20 அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர், மேலும் 5 எதிர்க்கட்சி உறுப்பினர்களை உள்ளிடக்கிய தேசிய செயலணியை உருவாக்கிய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதன் ஊடாக இந்தியாவிடம் மாத்திமின்றி ஏனைய சர்வதேச நாடுகளிடமும் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரசிங்க சுட்டிக்காட்டினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலை எதிர்பார்த்தைப் போன்று துறைமுகத்திற்குள் பிரவேசிக்க அனுமதித்திருந்தால் அதில் ஏற்பட்டிருக்கக் கூடிய வெடிப்பு சம்பவத்தால் துறைமுகம் முதல் ஷங்ரிலா ஹோட்டல் வரை காணப்படும் எந்தவொரு கட்டடமும் எஞ்சியிருக்காது. இவ்வாறான நிலை ஏற்படுவதற்கு எதற்காக இடமளிக்கப்பட்டது என்பதே தற்போது காணப்படும் பிரச்சினையாகும். மே மாதம் 19 ஆம் திகதி இரவு குறித்த கப்பல் இலங்கை கடற்பிரதேசத்திற்குள் பிரவேசித்தது. மே 20 ஆம் திகதி எமது நாட்டு குழுவினர் கப்பலுக்குள் சென்றனர். இதன் போது கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த தீப்பரவல் காரணமாக இலங்கை கடற்பரப்பிற்கு பாரிய பாதிப்பு ஏற்படக் கூடும் என்று சர்வதேச கடற்சூழல் பாதுகாப்பு அமைப்பினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த தீயைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கையினால் முடியாமல் போகும் பட்சத்தில் அதற்கு ஒத்துழைப்பு வழங்க தயார் என்றும் குறித்த அமைப்பு அறிவித்திருந்தது. எனினும அவ்மைப்பிடமிருந்து எவ்வித ஒத்துழைப்பும் கோரப்படவில்லை.

மே மாதம் 20 ஆம் திகதிக்கும் 24 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் ஏன் இது தொடர்பில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது இங்கு முக்கிய பிரச்சினையாகும். அனர்த்த முகாமைத்து சட்டமே இதன் போது நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டிய சட்டமாகும். இந்த சட்டத்தின் கீழ் தேசியசபையை கூட்டியிருக்கலாம். இவ்வாறு தேசிய சபையைக் கூட்டி அனர்த்த நிலைமையை அறிவித்திருக்கலாம்.

ஜனாதிபதி, பிரதமர், 20 அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர், மேலும் 5 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தேசியசபையில் உள்ளடக்கப்பட வேண்டும். அதற்கமைய இந்த சபையே கூடியே அடுத்தகட்ட தீர்மானத்தை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறான தீர்மானம் எடுக்கப்படவில்லை. தேசிய அனர்த்தம் ஏற்படக் கூடும் என்று அறிவித்ததன் பின்னர் வெளிநாடுகளிடமிருந்து ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொண்டிருக்க முடியும். நாம் இந்தியாவிடமிருந்து மாத்திரமே ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொண்டோம். அதுவும் மிக தாமதமாகும்.

எனினும் இது தொடர்பில் ஐரோப்பா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இது தொடர்பில் அதிக அனுபவம் காணப்படுகிறது. இவ்வாறிருக்கையில் அனர்த்தத்தை கட்டுபடுத்தியிருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாதது ஏன்? எதிர்காலத்தில் எமது பொருளாதாரத்திற்கு ஏற்படக் கூடிய பாதிப்பு யாது ? சூழலுக்கு ஏற்படக் கூடிய பாதிப்பு யாது ? என்பன குறித்து சிந்திக்க வேண்டும். குறிப்பாக நைற்றிக் அமிலம் கடலில் கலப்பதால் பவளப்பாறைகள் அழிவடையக் கூடும். பவளப்பாறைகளின் காரணமாகவே சுனாமியிலிருந்து நாம் காப்பற்றப்பட்டோம். ஆனால் தற்போது அவற்றுக்கும் பாதுகாப்பு இல்லை என்றார்.