(இராஜதுரை ஹஷான்)
மாகாண சபை தேர்தலை இவ்வருடம் நடத்துவதற்கான சாத்தியம் மிக அரிதாகவே காணப்படுகிறது. தேர்தலை நடத்துவதற்கு  அரசாங்கம் தயாராக உள்ளது. ஆனால் தேர்தலை நடத்துவதற்கான பாதுகாப்பான சூழல் தற்போது காணப்படவில்லை. தேர்தல் முறைமை தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானங்களும் உறுதியாக எடுக்கப்படவில்லை  என உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில், நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மாகாணசபை தேர்தல் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பிற்போடப்பட்டது. பாரிய போராட்டங்களுக்கு மத்தியில் உள்ளுராட்சிமன்ற தேர்தல்  கடந்த 2018 ஆம்  ஆண்டு நடத்தப்பட்டது. உள்ளுராட்சி மன்ற  தேர்தலின் பெறுபேறுகள் நல்லாட்சி அரசாங்கத்திற்கும்  மக்கள் விடுதலை முன்னணிக்கும் எதிராக காணப்பட்டது.

 அரசியல் நோக்கத்திற்காக  காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவதாக  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார். மாகாண சபை தேர்தலை எத்தேர்தல் முறையில் அதாவது பழைய தேர்தல் முறையிலா அல்லது புதிய தேர்தல் முறையிலா நடத்துவது என்ற சிக்கல் நிலை காணப்படுகிறது.  இப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது என்ற  நிலை காணப்பட்டது.

மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்பில் கட்சி தலைவர் மட்டத்தில் தீர்வு காண்பது அவசியம் என பிரதமர் தலைமையில் இடம் பெற்ற கூட்டங்களின் போது தீர்மானம் எடுக்கப்பட்டது. பழைய தேர்தல் முறைமையில்  இம்முறை மாத்திரம் மாகாண சபை தேர்தலை நடத்தி, எதிர்காலத்தில் புதிய தேர்தல் முறைமையினை மறுசீரமைப்பு செய்யலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசனை வழங்கியது. இதற்கமைய மாகாண சபை தேர்தலை கடந்த  மார்ச் மாதம் இறுதி வாரத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

 கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக அனைத்து திட்டங்களும் தாமதப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது  புதுவருட கொவிட் கொத்தணியின் தாக்கம் சடுதியாக அதிகரித்துள்ளது. ஆகவே இவ்வாறான நிலையில் மாகாண சபை தேர்தலை இவ்வருடம் நடத்துவதற்கான சாத்தியம் மிக அரிதாகவே காணப்படுகிறது.

மாகாண சபை தேர்தலை தொடர்ந்து பிற்போட வேண்டும் என்ற தேவை அரசாங்கத்திற்கு கிடையாது. தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது. ஆனால் அதற்கான பாதுகாப்பான சூழல் தற்போது  கிடையாது. தேர்தலை நடத்துவதற்கான பாதுகாப்பான சூழல் காணப்படுகிறது. என சுகாதார தரப்பினர் குறிப்பிட்டால் தேர்தலை நடத்துவோம்.