மன்னார் மாவட்டத்தில் மேலும் 9 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மன்னார் மாவட்டத்தில் தற்போதுவரை  மொத்தமாக 522 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் மேலும் 9 கொரோனா தொற்றாளர்கள் நேற்று சனிக்கிழமை (5) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  இந்த மாதம் தற்போது வரை 15 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றார்.

மேலும், கடந்த 3 ஆம் திகதி நானாட்டான் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 383 பி.சி. ஆர். பரிசோதனைகளின் போது மன்னார், அரிப்பு, சாந்திபுரம், வவுனியா, யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்த 6 நபர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மடு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 132 பி.சி.ஆர்.பரிசோதனைகளின் போது  2 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  மேலும் 787 பி. சி.ஆர்.பரிசோதனைகளின் முடிவுகள் எதிர் பார்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.