வானியல் அதிசய நிகழ்வுகளில் ஒன்றான வருடாந்திர சூரிய கிரகணத்தை உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் இந்த வாரம் அவதானிக்கலாம்.

"நெருப்பு வளையம்" சூரிய கிரகணம் என்று அழைக்கப்படும் இந்த காட்சி எதிர்வரும் ஜூன் 10 ஆம் திகதி வடகிழக்கு, வட அமெரிக்காவிலும், ஐரோப்பா மற்றும் ஆசியாவின் வடக்குப் பகுதிகளிலும் தென்படும்.

கனடா, கிரீன்லாந்து மற்றும் வடக்கு ரஷ்யாவில் உள்ள பார்வையாளர்களுக்கு நெருப்பு வளைய சூரிய கிரகணத்த‍ை அவதானிக்கலாம். 

கிழக்கு மற்றும் மத்திய மேற்கு அமெரிக்க பார்வையாளர்கள் பகுதி சூரிய கிரணத்தை அவதானிக்கலாம். அங்கு சூரியன் பிறை வடிவத்த‍ை ஒத்த வகையில் காட்சி தரும். அமெரிக்காவில் கிரகணம் சூரிய உதயத்திற்கு முன்பும், சூரிய உதயத்திற்கு பின்னரான சிறிது நேரத்திலும் காட்சியளிக்கும்.

நியூயோர்க்கில் கிரகணம் அதிகாலை 4:41 மணிக்கு தொடங்கி அதிகபட்சமாக அதிகாலை 5:35 மணிவரை தொடரும் என்று நாசா கூறியுள்ளது.

அதேநேரம் ஐரோப்பா மற்றும் வடக்கு ஆசியாவில் உள்ள மக்கள் ஒரு பகுதி சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும். இதனால் 2015 க்குப் பிறகு முதன்முறையாக ஐரோப்பியர்களுக்கு சூரிய கிரகணத்தை அவதானிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சூரய கிரகணத்தைப் வெறுங் கண்ணால் பார்வையிடுவதை தவிர்த்து "கிரகணக் கண்ணாடிகள்" அல்லது சூரிய வடிகட்டி போன்ற கண் பாதுகாப்பைப் பயன்படுத்தி அவதானிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது 2021 ஆம் ஆண்டில் இடம்பெறும் இரு சூரிய கிரகணங்களில் முதலாவதாக அமைந்துள்ள நிலையில் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம்  டிசம்பர் 4 அன்று நடைபெறும்.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் நகரும்போது சூரிய கிரகணம் நிகழ்கிறது. இது, சூரியனின் ஒளி பூமியை அடைவதைத் தடுக்கிறது.