2020 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் 2,960 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தன்னார்வ தொண்டு நிறுவனமொன்று மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

அத்துடன் இந்த ஆண்டில் இது வரையிலான காலப்பகுதியில்  2,587 சம்பவங்கள் பொலிஸாரிடத்தில் பதிவாகியுள்ளதாக சாஹில் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

அதேநேரம், 1,510 சிறுமிகளும் 1,450 சிறுவர்களும் பாலியல் சுரண்டலுக்கு பலியானார்கள் என்று தன்னார்வ தொண்டு நிறுவனம் ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்ட தகவல்களில் உள்ளதென்று தி நியூஸ் இன்டர்நேஷனல் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தத்தரவின் பிரகாரம், துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை நாளொன்றுக்கு 8 க்கும் அதிகமாகக் காண்பிக்கிறது.

அத்துடன் அளிக்கப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் பார்க்கின்றபோது, கடத்தல் 673, கற்பழிப்பு 305, கொடூரமான பாலியல் பலாத்காரம் 459, கூட்டுக் கற்பழிப்பு 98, கொடூரமான கூட்டு பாலியல் பலாத்காரம் 189 ஆக காணப்படுகின்றது.

அதேநேரம் 37 சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்குப் பிறகு கொலை செய்யப்பட்டுள்ளனர். 

அத்துடன் 7 சிறுவர்கள் மற்றும் 3 சிறுமிகள் கூட்டு பாலியல் பலாத்காரங்களுக்குப் பிறகு கொலை செய்யப்பட்டனர் என்று பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் அச்சு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் 345 குழந்தைகள் தங்கள் வீடுகளில் இருந்து காணாமல் போயுள்ளதாகவும் தரவுகள் காணப்படுகின்றன. இதேநேரம் இளவயது திருமணங்கள் தொடர்பில் 119 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மொத்தமாக உள்ள 2,960 வழக்குகளில் 1,579 வழக்குகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் அறிமுகத்தைக் கொண்டிருந்ததாகவும் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

அந்த நேரம்  289 வழக்குகளில், பாகிஸ்தானைச் சாராதவர்கள் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் குறித்த பாகிஸ்தானின் அச்சு ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.