சூழல் மாசடைதலும் அதன் தாக்கங்களும் - சுற்றுச்சூழல் தினம் இன்று !

Published By: Digital Desk 2

05 Jun, 2021 | 02:00 PM
image

மனிதனைச் சுற்றியுள்ள இயற்கையின் மொத்த அம்சங்கள் “சூழல்” எனப்படும். நாள்தோறும் நாம் காணுகின்ற எம்மைச் சுற்றியுள்ள சகல அம்சங்களையும் சூழல் என்பது குறித்து நிற்கும். சூழல் என்னும் விடயத்தில் சூழலியல், சூழல், சூழற்றொகுதி போன்ற சொற்பதங்கள் முக்கியமானவை. 

சூழலியல் என்பது சூழலுக்கேற்ப உயிரினங்களின் இசைவாக்கம் பற்றிய அறிவை வழங்குகின்ற கற்கைநெறியாகும். இந்தவகையில் உயிர்ப்பகுதிகளும், உயிரற்ற பகுதிகளும் இணைந்த தோற்றப்பாட்டினை சூழல் என வரையறுக்கலாம். சூழற்றொகுதியை நோக்கின் யாதாயினும் வரையறைக்குட்பட்ட பிரதேசத்தில் நிலவுகின்ற பௌதிகச் சூழலையும், அச்சூழலின் இயல்பிற்கேற்ப வாழும் அனைத்து இடைத்தொடர்புகளையும் கூட்டாக நோக்குவதாகும். உயிரினத் தோற்றத்திற்கும், நிறைவேற்றுத் தன்மைக்கும் சூழலமைப்பே காரணமாகும். இச்சூழல் இரண்டு வகைப்படும். 

பௌதிகச் சூழல் அல்லது இயற்கைச் சூழல் மற்றும்  பண்பாட்டுச் சூழல் அல்லது மனிதனால் உருவாக்கப்படும் சூழல்.

சூழலின் முக்கியத்துவம் 

இயற்கையும், சுற்றுச்சூழலையும் மனித இனத்தின் சுகவாழ்விற்கு பயன்படுத்தல் என்ற செயற்பாடானது தற்போது முக்கியமான ஒரு விடயமாக மாறி வருகின்றது. இது அபிவிருத்தி என அழைக்கப்படுகின்றது. இயற்கை வளங்களையும், சுற்றுச் சூழலையும் எந்த தேவைக்கும் பயன்படுத்தும் போதும் சூழலியல் மற்றும் சுற்றுச் சூழலியல் ஆகியவற்றின் அடிப்படைத் தத்துவங்களுக்கு அமைவாகவே செயற்பட வேண்டும். 

தற்காலத்தில் அபிவிருத்தி பற்றிப் பேசப்படும் போதெல்லாம் சுற்றுச்சூழல் மிகவும் முக்கியமான இடத்தைப் பிடித்துக் கொள்கிறது. இந்த விடயத்தில் உள்ள சிக்கல் தன்மை. பாதகத்தன்மை மற்றும் இதன் முக்கியத்துவம் ஆகிய அனைத்தும் இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுகக்கு பாரிய அழுத்தத்தைக் கொடுக்கிறது. 

சுற்றுச்சூழல் என்ற விடயத்திற்கும், அபிருத்திக்கும் இடையிலான தொடர்பு தெளிவற்றதாகவும், விளங்கிக் கொள்வதற்கு கடினமானதாகவும் காணப்படுகின்றது. இதற்குக் காரணம் மனிதன் சுற்றுச்சூழலின் இயற்கைச் சமனிலையைப் பற்றி பூரணமாக அறியாமல் இருப்பதாகும். 

அண்மைக் காலங்களில் விஞ்ஞானத்துறையானது மிகவும் முன்னேற்றம் அடைத்துள்ள போதிலும் எம்மால் சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான அறிவை இன்னும் பூரணமாக பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. அதுமட்டுமல்ல இந்த அறிவை வளங்களைப் பயன்படுத்துதல் மற்றும் அவற்றினைப் பேணுதல் போன்றவற்றிலும் அபிவிருத்தி, நின்று நிலைக்கும் பயன்பாடு போன்றவற்றிலும் கூட எம்மால் பூரணமாக பயன்படுத்த முடியாமல் இருக்கின்றது. உலகளாவிய ரீதியில் அநேக துறைகளில் இன்று சூழல்க்கல்வி முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இதற்கு அடிப்படைக் காரணம் அண்மைக் கால உலக சூழல் நெருக்கடியாகும்.

சர்வதேச சமூகத்தின் சூழல் பற்றிய ஈடுபாட்டை இனங்காண ஐக்கிய நாடுகள் சபையால் 1972ஆம் ஆண்டு ஸ்ரோக்கம் நகரில் நடைபெற்ற சூழல் மகாநாட்டில் சுற்றுச்சூழலை ஒருங்கிணைப்பது பற்றிய விவாதங்கள் நிகழ்ந்தன. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு பிரகடனப்படுத்தப்பட்ட முதலாவது உலக சுற்றுச்சூழல் தினமானது “ஒரே ஒரு பூமி” எனும் கருப்பொருளுடன் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து யூன் மாதம் ஐந்தாம் திகதி ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு ஆய்வுப் பொருளை அடிப்படையாகக் கொண்டு உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் இவ்வருடத்திற்கான (2021) ஆய்வுப்பொருள்  “சுற்றுச் சூழல் மறுசீரமைப்பு” (ecosystem restoration) என்பதாகும். இந்த ஆண்டு நிகழ்வு 2021ஆம் ஆண்டு தொடக்கம் 2030ஆம் ஆண்டு வரையான சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் தசாப்தத்தின் தொடக்கத்தையும் குறிக்கும். 

ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் உதவியுடன் ஒவ்வொரு ஆண்டும் 150இற்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கின்றன. இந்த ஆண்டு (2021) உலக சுற்றுச்சூழல் தினத்தை நடத்துவதற்கான தொகுப்பாளராக பாகிஸ்தான் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இயற்கையுடன் ஒரு நல்ல உறவை உருவாக்குவதில் சிறப்புக் கவனம் செலுத்துவதனை இந்த ஆண்டிற்கான கருப்பொருள் (சுற்றுச் சூழல் மறுசீரமைப்பு) உணர்த்துகிறது. அண்மைக்காலத்தில் பாகிஸ்தான் பசுமை வேலைகளை உருவாக்குவதற்கும், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கு இயற்கையை அடிப்படையாகக் கொண்ட தீர்வுகளை ஆதரிப்பதற்கும், பல்லுயிர் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் “சுற்றுச் சூழல் மறுசீரமைப்பு நிதி” என்ற புதிய தளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. 

சூழல் மாசடைதல் 

உலகளாவிய ரீதியில் நாடுகளை  பொதுவாக அபிவிருத்தி அடைந்த நாடுகள், அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் என இரண்டாக வகைப்படுத்தலாம். இத்தகைய இரண்டு வகையான நாடுகளிலும் குடித்தொகை அதிகரிப்பு, நகராக்க விருத்தி, கைத்தொழில் மயமாக்கம் என்பன பொதுவாகக் காணப்படுகின்றன. குடித்தொகை அதிகரிப்பிற்கேற்ப தேவைகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. 

எனவே மனிதன் தனது தேவைகளை நிவர்த்தி செய்ய  முற்படும் போது அதன் விளைவாக பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படுகின்றது. இத்தகைய பிரச்சினைகளில் ஒன்றாகவே சூழல் மாசடைதல் காணப்படுகின்றது. இயற்கைச் சமநிலை ஏதாவது ஒரு காரணத்தால் குழப்பப்படும் போது அது சூழல்  தொகுதியில் அல்லது சுற்றாடல் தொகுதியில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். 

அந்த வகையில் சூழல் தொகுதியில் மனிதன் நேரடியாக அல்லது மறைமுகமாக ஏற்படுத்தும் விரும்பத்தகாத அல்லது பாதகமான பெரும்பாலும் மீள முடியாத விளைவுகள் சூழல் மாசடைதல் எனப்படும். அபிவிருத்தி நோக்கிய மனித நடத்தையினால் இன்று சூழல் அதிகளவில் மாசடைந்து வருகின்றது. மனிதர்களின் அலட்சியப் போக்குக் காரணமாக புவி தன் சமநிலையை இழந்து செல்கிறது. 

நவீன விஞ்ஞான தொழில்நுட்ப மாற்றங்கள், கைத்தொழில் மயமாக்கல், நகர மயமாக்கல், குடித்தொகைப் பெருக்கம் ஆகிய காரணங்களால் சூழல் பலவகையாக மாசுபடுகின்றது. நச்சு வாயுக்களால் வளிமண்டலம் நிரம்பியுள்ளது. காடழிப்பினால் இயற்கை மழையைப் புவி இழந்துள்ளது. போர் சூழலினாலும், அணுப் பரிசோதனைகளினாலும் அழிவுகளைப் புவி எதிர் நோக்குகிறது. இத்தனைக்கும் மனிதனின் அலட்சியப்போக்கும், சுயநலமுமே காரணமாக இருக்கின்றது. 

நகரங்களில் வசதிவாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுவதன் காரணமாக கிராமப்புற வசதிபடைத்த மக்கள் நகர்ப்பகுதிகளை நோக்கி இடம்பெயருகின்றனர். இதன் காரணமாக நகர்ப் பகுதிகளில் கிராமங்களை விட சூழல் மாசடைதல் அதிகமாகக் காணப்படுகின்றது இந்த வகையில் பின்வரும் வகையில் சூழல் மாசடைதல் இடம்பெறுகின்றது.

நீர் மாசடைதல்

நிலம் மாசடைதல்

வளி மாசடைதல்

ஒளி மாசடைதல்

ஒலி மாசடைதல்

இந்த வகையில் நீர் மாசடைதலை நோக்குவோமாயின் தொழிற்சாலைக் கழிவுகள் நீருடன் கலத்தல், விவசாய இரசாயனப் பதார்த்தங்கள் நீர் நிலைகளுடன் கலத்தல், பொலித்தின் மற்றும் பிளாஸ்ரிக் போன்றவற்றை நீர் நிலைகளில் இடுதல், தொழிற்சாலைகளில் வெளியேறும் இரசாயனப்பதார்தங்கள் மற்றும் கழிவுநீர் என்பன நீர் நிலைகளில் விடுவிக்கப்படல், நகர்ப்புற குப்பை கூழங்கள் ,கழிவுநீர் என்பவற்றை ஆறுகள், கால்வாய்கள் என்பவற்றுள் விடுவித்தல், நீர் நிலைகளில் பல்வேறு பொருட்களை கழுவுதலும், குளித்தலும் கால்நடைகளை நீர் நிலைகளில் குளிப்பாட்டுதல், மலசலகூட கழிவுகள் நீருடன் கலத்தல் போன்றனவற்றைக் குறிப்பிடலாம்.

அடுத்ததாக நிலம் மாசடைதலை நோக்குவோமாயின் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் கழிவுகளை நிலத்தில்; புதைத்தல், காடழித்தல், உக்காத பொருட்களை நிலத்தினுள் புதைத்தல் (கண்ணாடி, பீங்கான் ஓடுகள்),  தொழிற்சாலை எண்ணெய்க் கழிவுகளை நிலத்தினுள் செலுத்துதல். அளவிற்கு அதிகமான செயற்கை இரசாயன உரங்களையும் கிருமிநாசினிகளையும் விவசாயத்தின் போது பயன்படுத்துதல், பல அடுக்கு மாடிக்கட்டடங்களை கட்டுதல், ஆற்றுக் கழிமுகங்களில் மண் அகழ்தல், பல அதிவேக நெடுஞ்சாலைகளை அமைத்தல் போன்ற செயற்பாடுகளைக்  குறிப்பிடலாம். 

அடுத்ததாக வளி (காற்று) மாசடைதலை நோக்குவோமாயின் தொழிற்சாலை புகைகள் வளியில் கலத்தல், நச்சுவாயுக்கள் வளியினுள் கலத்தல், கிருமிநாசினிகள் விசிறும் போது அவை வளியில் கலத்தல், வெடிபொருள்களின் நச்சுவாயுக்கள் வளியில் கலத்தல் பழைய வாகனங்;களில் இருந்து வெளியேறும் புகை வளிமண்டலத்தில் கலத்தல், யுத்தங்கள் நடைபெறுகின்ற போது நவீன ஆயுதங்களின் பயன்பாட்டால் நச்சுப்புகைகள் வளிமண்டலத்தில் கலத்தல், எரிமலை வெடிப்பினால் ஏற்படும் புகை, தூசு போன்ற காரணிகளால் வளி மாசடைகின்றது. 

அதுமட்டுமன்றி அணுஆயுதத் தாக்குதல்கள் காரணமாக பெருமளவில் வளிமாசடைகின்றுது. ஏவுகணைகளை வானத்தில் ஏவுவதாலும், காட்டுத் தீபரவும் சந்தர்ப்பங்களிலும், நாம் விறகை எரித்துப் பயன்பெறும் போதும் அதிகளவு புகை வளிமண்டலத்தைச் சென்றடைகின்றமை போன்ற செயற்பாடுகளினாலும் வளி மாசடைகின்றது. இதனால் ஓசோன் படை சிதைவடைதல், பச்சை வீட்டுத்தாக்கம், அமிலமழை, தீயகதிர்வீச்சு போன்ற பல தீயவிளைவுகள் ஏற்படுகின்றன.

இந்தவகையில் அடுத்ததாக ஒலிமாசடைதலை நோக்குவோமாயின் பட்டாசு அல்லது வெடிபொருட்கள் எரியும் போது சத்தம் வெளிவிடப்படல், தொழிற்சாலை இயந்திரங்களால் ஏற்படும் பாரியசத்தம், யுத்தநிலமைகளின் போது ஏற்படும் பாரிய சத்தம் ,பழைய வாகனங்களைச் செலுத்துவதால் ஏற்படும் அதிகளவான சத்தம் கல்லுடைக்கும் போது ஏற்படும் பாரியசத்தம் வானைக் கிளித்துச் செல்லும் போர் விமானங்களால் ஏற்படும் பாரியசத்தம் போன்ற பல செயற்பாடுகளினால் ஒலி மாசடைகின்றது.

பூகோள சுற்றாடல் பிரச்சினைகள்

உலகில் எல்லா உயிரினங்களும் வாழக்கூடிய ஒரே ஒரு கோள் புவியாகும். இந்தப் புவியில் இன்றைய மிதமிஞ்சிய குடித்தொகையும், அதன் எல்லையற்ற முயற்சியும், முக்கிய துறைகளின் வளர்ச்சியும் எல்லைக்கே சென்றுள்ளது. குறிப்பாக கைத்தொழில,; விவசாயம், கால்நடை வளர்ப்பு, விஞ்ஞானம், தொழில்நுட்பம், தொலைத் தொடர்புகள், ஆயுத உற்பத்திகள் போன்றவை சூழலை ஆதாரமாக வைத்தே அதன் வளர்ச்சி உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. 

இத்துறைகளின் எல்லையற்ற வளர்ச்சியினால் இன்று புவிக் கோளமானது உலகளாவிய ரீதியில் பல சூழல்ப் பிரச்சினைகளை எதிர் நோக்கியுள்ளது. முக்கியமான பிரச்சினைகள் பின்வருமாறு ,

பச்சை வீட்டு விளைவும், பூகோள வெப்பமாதலும்

ஓசோன் படைத் தேய்வு

காடழிப்பும், உயிரினப் பல்வகைமை அழிவும்

பாலைவனமாதல்

அமில மழை

சூழல் மாசடைவதைத் தடுப்பதற்கான வழிகள்

புவியில் உள்ள கூறுகள் மாசடைதலைத்  தடுப்பதற்கு சர்வதேச ரீதியாக இப்பிரச்சினை இன்று ஆராயப்படுகிறது. உலக நாடுகளின் அரசாங்கங்களோடு இவ்வெண்ணக் கருவை கவனமெடுக்கும் விஞ்ஞான நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் பல ஆய்வுகளை நடத்தி வருகின்றன. சூழல் மாசடைதல் தொடர்பான விழிப்புணர்ச்சிச் செயற்பாடுகள் கையாளப்படுகின்றன. சிறப்பாக சூழல் மாசடைதலைத் தடுக்கும் இந்த நடவடிக்கைகளின் பங்குதாரர்களாக இருக்கக் கூடிய பாடசாலைகளிலும், கல்லூரிகளிலும் சூழல் பற்றிய கல்வியுறிவு, மாசடைதலைத் தடுக்கும் எச்சரிக்கைகள், பிரசாரங்கள் என்பனவெல்லாம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இயற்கையின் முக்கிய வளங்களான நீர், காற்று, நிலம், வனம், கனிமங்கள் போனவற்றின் அழிவினை தடுப்பதற்கான பரிகார நடவடிக்கைகளில் எல்லாத் தரப்புகளும் கவனம் செலுத்தி வருவது நல்லதொரு செயற்பாடு ஆகும். அந்த வகையில் மரங்களை நடுதல், இயற்கைப் பசளைகளை பயன்படுத்துதல், குப்பைகூழங்கள் எரிப்பதை தவிர்த்து மண்ணிணுள் புதைத்தல், உக்காத பொருட்களை பொருத்தமான முறையில் அகற்றுதல், பொலித்தீன் பயன்பாட்டினை தடை செய்தல் போன்ற செயற்பாடுகளின் மூலம் சூழலை மாசடைவதை தடுக்கலாம்.

ஆகவே சூழல் மாசடைவதைத் தடுக்க வேண்டியது மனிதராய் பிறந்த எங்கள் ஒவ்வொருவருடைய பெறுப்பும், கடமையும் ஆகும். எனவே சூழலை மாசடையாது பாதுகாத்து சூழலுடன் நட்புறவாக இணைந்து சுகதேகிகளாக அனைவரும் வாழ்வோம் என இந்த சூழல் தின நாளில் எல்லோரும் உறுதி பூணுவோமாக.

கலாநிதி திருமதி சுபாஐனி உதயராசா

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right