(இராஜதுரை ஹஷான்)
கொழும்பு துறைமுக கடற்பரப்பில் 9.5 கிலோமீற்றர் தொலைவில் தீ விபத்துக்குள்ளாகியுள்ள பேர்ள் சரக்கு கப்பல் குறித்து கப்பலின் கேப்டனும், துறைமுக அதிகார சபையும் குறிப்பிடும் கருத்துக்கள் முன்னுக்கு பின் முரணான வகையில் உள்ளன.

தீ விபத்துக்குள்ளாகியுள்ள கப்பலினால் நாட்டின் கடல் வளத்திற்கும், கடல் வாழ் உயிரினங்களுக்கும் ஏற்பட்டுள்ள பேரழிவை நட்டஈட்டால் மதிப்பிட முடியாது. ஆகவே தீ விபத்து தொடர்பில் உண்மை காரணியை கண்டறிய விசேட  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமைப்பது அவசியம்  என வலியுறுத்தி அகில இலங்கை துறைமுக ஊழியர் பொது ஒன்றியத்தினர் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளனர்.

 அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, கொழும்பு துறைமுகத்தின் கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளாகி தற்போது கடலில் முழுமையாக மூழ்கும் அபாயத்தை எதிர்க் கொண்டுள்ள எம். சி எக்பிரஷ் பேர்ல் கப்பலினால் நாட்டின் கடல் வளத்திற்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பை நட்டஈட்டால் மதிப்பிட முடியாது. இவ்விபத்தின் காரணமாக மீன்பிடி கைத்தொழிலும்,  கடற்கரை பிரதேசத்தை சூழ்ந்த சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலுக்கும் பாரிய நெருக்கடி தற்போது தோற்றம் பெற்றுள்ளன.

சரக்கு கப்பலின் கொள்கலன்களின் இருந்த  இரசாயன பொருட்கள் மற்றும் இதர பொருட்கள் தொடர்பிலான தகவல்களை கப்பலின் கேப்டன் துறைமுக அதிகார சபைக்கு அறிவிக்காமல் கொழும்பு துறைமுக கடற்பரப்பில் கப்பலை நங்கூரமிட்டதாக துறைமுக அதிகார சபை முன்வைத்த குற்றச்சாட்டை சரக்கு கப்பலின்  கேப்டன் மறுத்துள்ளார். ஆகவே கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து கப்பலின் கேப்டன் மற்றும் துறைமுக அதிகார சபை தரப்பினர் குறிப்பிடும் கருத்துக்கள் முன்னுக்குபின் முரண்பட்டதாக காணப்படுகிறது.

அத்தோடு,  இதற்கு முன்னரும் நாட்டின் கடற்பரப்பில்  நங்கூரமிடப்பட்டிருந்த  சரக்கு கப்பல்கள் தீ விபத்துக்குள்ளாகியுள்ளன. அவ்வாறான விபத்துக்களை துறைமுக அதிகார சபையும், கடற்படையினரும் சிறந்த முறையில் கையாண்டு பிரச்சினையை சீர் செய்துள்ளார்கள்.

 இக்கப்பலில் ஏற்பட்ட பிரச்சினை மற்றும் தீர்வு எடுக்கும் அதிகாரம்  தொடர்பில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இவ்வாறான நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தின் காரணமாக நாட்டின் கடல் வளத்திற்கும், கடல் வாழ் உயிரினங்களுக்கும் ஏற்பட்டுள்ள பேரழிவை நட்டஈட்டால் மாத்திரம் மதிப்பிட முடியாது. இவ்விபத்துக்கு தேசிய மட்டத்தில் பொறுப்பு கூற வேண்டியவர்கள் யார் என்பது கண்டறியப்பட வேண்டும்.  ஆகவே விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு  அமைத்து விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம்.