சீரற்ற காலநிலையால் ஒரு இலட்சத்திற்கும் அதிக மக்கள் பாதிப்பு : 16 வயது சிறுமி பலி : 15 வயது சிறுவனை காணவில்லை : சீரற்ற காலநிலை தொடரும் !

04 Jun, 2021 | 10:23 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கடந்த இரு தினங்களாக நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். 

அத்தோடு மேலுமொரு பெண் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு ,  மண்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி சிறுவனொருவன் உள்ளிட்ட இவர் காணாமல் போயுள்ளனர்.

கடும் மழை , வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்றின் காரணமாக இன்று வெள்ளிக்கிழமை மாலை வரை கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு, புத்தளம் மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் 35 பிரதேச செயலகப்பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இப்பிரதேச செயலகங்களிலுள்ள 1119 குடும்பங்களைச் சேர்ந்த 5067 நபர்கள் 27 பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு மண்சரிவு மற்றும் வெள்ள எச்சரிக்கை காரணமாக 200 குடும்பங்களைச் சேர்ந்த 792 நபர்கள் தற்காலிகமாக உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய இன்று மாலை வரை 31 303 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 30 672 நபர்கள் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதோடு , 5 வீடுகள் முழுமையாகவும் 317 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மண்சரிவில் 16 வயது சிறுமி பலி

இரத்தினபுரி மாவட்டத்தில் வெவ்வேறு பிரதேசங்களில் இன்றையதினம் 3 மண் சரிவுகள் பதிவாகின. இதன் போது அயாகம பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிரிஎல்ல பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் 16 வயதுடைய செத்மினி லக்மாலி பெரேரா என்ற பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார். 

Image

அத்தோடு குறித்த வீட்டிலிருந்த 50 வயதுடைய பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று எஹெலியகொட பிரதேச செயலகத்திற்குட்பட்ட வலவ்வ கிராம உத்தியோகத்தர் பிரிவில் கெஹெத்த பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் நபரொருவர் காயமடைந்துள்ளார்.

Image

நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனைக் காணவில்லை

இதேவேளை புத்தளம் மாவட்டத்தில் மஹவெவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் 15 வயது சிறுவனொருவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

இன்று வெள்ளிக்கிழமை காலை குறித்த சம்பவம் பதிவாகியுள்ளதாகவும் , சிறுவனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற வீதி நீரில் மூழ்கும் அபாயம்

வெள்ளம் காரணமாக கொழும்பு - கோட்டை பிரதேச செயலகத்திற்குட்பட்ட தியவன்னாஓயாவின் நீர்மட்டம் அதிகரித்தமையின் காரணமாக பாராளுமன்ற வளாக வீதி நீரில் மூழ்குவதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தன.  

வீடுகளுக்குள் 4 அடி உயரத்திற்கு வெள்ள நீர்

கடுவலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட நவகமுவ கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஹரிததனவத்த என்ற பிரதேசத்தில் 8 வீடுகளில் ஒரு அடி உயரத்திற்கு நீர் உட்புகுந்திருந்தது.

No description available.

இதேபோன்று கொலன்னாவை பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெல்லம்பிட்டி பிரன்டியாவத்தை பிரதேசத்தில் பல வீடுகளுக்கு வெள்ள நீர் உட்புகுந்தது. திம்பிரிகஸ்யாய (தெமட்டகொட) பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாவில பிரதேசத்திலுள்ள சுமார் 70  வீடுகளுக்குள் 4 அடி உயரத்திற்கு வெள்ள நீர் புகுந்தது.

கம்பஹா மாவட்டத்தில் களனி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிரிபத்கொட பிரதேசத்திலுள்ள குறுக்கு வீதிகள் பல நீரில் மூழ்கியதோடு , வீடுகள் பலவற்றிலும் வெள்ள நீர் உட்புகுந்தது. களுத்துறை மாவட்டத்தில் ஹொரண பிரதேச செயலகப்பிரிவில் கொகுணுவிட்ட, வெலிகல பிரதேசத்தில் 3 வீடுகளிலும் , பண்டாரகம  பிரதேச செயலகப்பிரிவில் அட்டலுகம பிரதேசத்தில் 10 வீடுகளிலும் வெள்ள நீர் புகுந்தது.

44 000 பாவனையாளர்களுக்கு மின்சார விநியோகத்தடை

கடும் மழை காரணமாக 44 000 மின் பாவனையாளர்களுக்கு மின் விநியோகம் தடை பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 

கடும் மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களே இதற்கான காரணமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு மின்விநியோக தடை இடம்பெற்றுள்ள பிரதேசங்களில் துரிதமாக அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நீர் தேக்கங்களின் 12 வான் கதவுகள் திறப்பு

புத்தளம் மற்றும் குருணாகல் மாவட்டங்களில் பெய்ய கடும் மழை காரணமாக சில நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதற்கமைய திப்போவ நீர்தேக்கத்தின் 6 வான்கதவுகள் 2 அடிக்கு திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் டீ.அபேசிறிவர்தன தெரிவித்தார். 

இந்த வான்கதவுகளில் நொடிக்கு 3240 கன அளவு நீர் வெளியேறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதே போன்று தெதுருஓயா நீர் தேக்கத்தின் 4 வான்கதவுகள் 2 அடிக்கு திறக்கப்பட்டுள்ளதோடு , இவற்றில் நொடிக்கு 2800 கன அளவு நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் குக்குலே நீர் தேக்கத்தில் 2 வான்கதவுகள் 2 அடிக்கு திறக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்தும் மழையுடனான காலநிலை நீடிக்குமானால் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வடையக் கூடும் என்பதால் அதனை அண்டிய பிரதேசங்களிலுள்ள மக்களை மிக அவதானத்துடன் செயற்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

கங்கைகளை அண்மித்த பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை

அத்தனகல ஓயாவில் நீர் மட்டம் உயரும் பட்சத்தில் அத்தனகல்ல, கம்பஹா, மினுவாங்கொட, ஜாஎல ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் அத்தனகலுஓயா மற்றும் உருவல்ஓயாவை அண்மித்த தாழ் நிலப்பகுதிகளில் வெள்ளம் ஏற்படக் கூடும்.

களுகங்ககையில் நீர் மட்டம் உயரும் பட்சத்தில் ஹொரனை, அகலவத்தை, இங்கிரிய, பாலிந்தநுவர, புளத்சிங்கள, தொடங்கொட, மில்லனிய, மதுராவல மற்றும் களுத்துறை ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் தாழ் நிலப்பகுதிகளில் வெள்ளம் ஏற்படக் கூடும்.

களனி கங்கையை அண்மித்த தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, சீதாவாக்கை, தொம்பே, ஹோமாகம, கடுவல, பியகம, கொலன்னாவ, கொழும்பு மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளில்  சிறு வெள்ளப்பெருக்கு அதிகரிக்கக் கூடும் என்று நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

300 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 300 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பல பகுதிகளில் பதிவாகியுள்ளது. தும்மலசூசிய பிரதேசத்தில் 346.7 மி.மீ. மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதே போன்று கரந்தனையில் 316.5 மி.மீ., எஹெலியகொட 311.5 மி.மீ., ஹொரனை - 302.5 மி.மீ., மத்துகம 293 மி.மீ. என மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

ஆறு மாவட்டங்களுக்களில் ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இந்த அனர்த்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டிருப்பதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள, இங்கிரிய, பாலிந்தநுவர, அகலவத்த ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வலலாவிட்ட, ஹொரண போன்ற பிரதேச செயலகங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் எஹலியகொட, கலவான பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அயகம, குருவிட்ட எலபாத்த, நிவித்திகல, கிரியெல்ல, இரத்தினபுரி போன்ற பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாத்தறை மாவட்டத்தின் பிட்பத்தர பிரதேச செயலப் பிரிவு, காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேச செயலக பிரிவுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கொழும்பில் சீதாவக்க பிரதேச செயலக பிரிவிற்கும் கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுக்கும் தேசிய கட்டட ஆராய்வு நிறுவகம் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கையை நீடித்துள்ளது.

11 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

புத்தளம் , குருணாகல், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கேகாலை, கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் 175 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வீதிகள் நீரில் மூழ்கின

வெள்ளம் மற்றும் மண் சரிவின் காரணமாக களுத்துறை, கம்பஹா மாவட்டங்களில் பிரதான வீதிகள் பல நீரில் மூழ்கின. களுத்துறை - புளத்சிங்கள பிரதேசத்தில் மொல்காவ - புளத்சிங்கள வீதி , பாலிந்தநுவர பிரதேசத்தில் பதுரலிய - கலவான வீதி, பதுரலிய - ஹெடிகல்ல வீதி மற்றும் அகலவத்தை பிரதேசத்தில் கிரிகொல - துல்எல்ல வீதி ஆகியவை 2 - 5 அடி வரை நீர்மட்டம் உயர்ந்ததால் அதில் மூழ்கின.

இதே போன்று கம்பஹா மாவட்டத்தில் வேயங்கொட பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் வியலிகொட, மொட்டுன்ன, வந்துரவ, மனலகொட மற்றும் பண்டாரநாயக்க ஆகிய கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட வீதிகள் நீரில் மூழ்கின. கம்பஹா , பியகம - களனி வீதி , மினுவாங்கொட - வேயங்கொட வீதி , மீரிகம - அத்தனகல்ல வீதி, பியகம - கடுவல வீதி ஆகியவையும் நீரில் மூழ்கின.

மழை தொடரும்

நாட்டின்தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்  குறிப்பிட்டுள்ளது. 

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பலஇடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

மேல்,  சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. 

மத்திய மற்றும் ஊவாமாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமானபலத்தமழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடற்பரப்பு

புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும். 

காற்றின் வேகமானது 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன், காலியிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காலியிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ளஏனைய கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். 

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டீசலின் விலையை குறைக்க முடியாது -...

2022-10-03 16:15:16
news-image

வைத்தியர்கள் 60 வயதில் ஓய்வு பெற்றால்...

2022-10-03 16:12:06
news-image

ரயில்வே திணைக்கள சொத்துக்களை கொள்ளையிட்ட மூவர்...

2022-10-03 17:03:50
news-image

மட்டு. கொக்கட்டிச்சோலையில் யானை தாக்கி விவசாயி...

2022-10-03 17:08:23
news-image

மண்சரிவு, வெள்ள அனர்த்தங்களிலிருந்து மக்களை பாதுகாக்க...

2022-10-03 16:56:26
news-image

கிழக்கு மாகாணத்தை ஆளுநர் நாசப்படுத்தியுள்ளார் -...

2022-10-03 16:23:08
news-image

குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு :...

2022-10-03 16:49:44
news-image

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைகிறது...

2022-10-03 16:07:56
news-image

சாய்ந்தமருது கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டவர் ஆசிரியை...

2022-10-03 16:25:17
news-image

கனேடிய உயர்ஸ்தானிகரும் பிரான்ஸ் தூதுவரும் ஜனாதிபதியை...

2022-10-03 16:02:37
news-image

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளின்...

2022-10-03 15:27:04
news-image

சட்டவாக்க நிலையியற் குழுவுக்கான உறுப்பினர்கள் நியமனம்...

2022-10-03 16:13:31