(இராஜதுரை ஹஷான்)

 கொவிட் -19 வைரஸ் தாக்கத்தினால்  பொருளாதார மட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு  5000 ஆயிரம் ரூபா நிவாரணம் வழங்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. இதுவரையில் 4 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது.   

பொறுப்புக்கூறலில் இருந்து மைத்திரி ஒருபோதும் விலக முடியாது - செஹான் சேமசிங்க  | Virakesari.lk

நிவாரண  நிதியை பெற்றுக் கொள்வற்காக   வரிசையில் காத்திருப்பதை பொது மக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். என சமுர்த்தி மற்றும் நுண்நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

 

சமுர்த்தி நிவாரண நிதி வழங்கல் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட் தாக்கத்தை கருத்திற் கொண்டு நாடு தழுவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.  இதனால் பொருளாதார ரீதியிவ் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய  5000 ஆயிரம் ரூபா நிவாரண நிதி வழங்கப்படுகிறது. இந்நிதியை பெற்றுக் கொள்ள  இம்முறை 60 இலட்சம் குடும்பங்கள் தகுதிப் பெற்றுள்ளன.

 

60 இலட்சம் குடும்பங்களுக்கு 5000 ஆயிரம் ரூபா நிவாரண நிதி வழங்க முதற்கட்டமாக 30 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது. இதற்கமைய தற்போது 4 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.  பொது மக்கள் ஒன்று கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் நிவாரண நிதி வழங்கலில் தாமதம் ஏற்படும்.

 

பெரும்பாலான பிரதேசங்களில் கிராம சேவகர்கள் சமுர்த்தி பயனாளர்களின் வீடுகளுக்கு சென்று 5000 ஆயிரம்  நிவாரண நிதியை வழங்குகிறார்கள். ஆகவே நிவாரண நிதியை பெற்றுக் கொள்ள பொது மக்கள் அநாவசியமான முறையில் ஒன்று கூடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

 

5000 ஆயிரம்  விவகாரத்தில் ஒரு சில பிரதேசங்களில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. கிராம சேவகர்களின் பாதுகாப்பிற்காக பொலிஸாரை கடமையில் ஈடுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளன.  நிவாரண நிதியை பெற்றுக் கொள்ள தகுதியிருந்தும் நிதியை பெறாதவர்கள் பிரதேச செயலக பிரிவின் ஊடாக மேன்முறையீடு செய்ய முடியும்.

 

நிவாரண நிதி  வழங்களில் ஏதேனும், மோசடிகள் அல்லது முறைகேடான செயற்பாடுகள் இடம் பெற்றால் பொது மக்கள் 1965 என்ற விசேட இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடளிக்க முடியும்.  நெருக்கடியான சூழ்நிலையில் இந்நிவாரண நிதி வழங்கப்படுகிறது. ஆகவே பொது மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்  என்றார்.