(எம்.மனோசித்ரா)

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் ஆபத்தை உணர்ந்தும் அதனை இலங்கை கடற்பரப்பிற்குள் அனுமதித்தது யார் ? சுயாதீன விசாரணைகளை ஒன்றினூடாக இதனை வெளிப்படுத்த வேண்டும் என்பதோடு  , பொறுப்பு கூற வேண்டிய அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியை வலியுறுத்தினார்.

எனினும் அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமா என்பது சந்தேகமே எனத் தெரிவித்த அவர் , சில பிரச்சினைகள் காலத்தால் மறக்கடிக்கப்பட்ட வரலாறு இலங்கையில் காணப்படுகிறது. இந்த பிரச்சினையையும் கடலில் மூழ்கச் செய்ய அரசாங்கம் முயற்சிக்கிறா என்று தோன்றுவதாகவும் குறிப்பிட்டார்.

ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

ஏனைய நாடுகளின் துறைமுகங்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில் , இலங்கையின் துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு அனுமதியளித்தது யார் , அதற்கு சாதகமான காரணி என்ன என்பது தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ளது.

எமது நாட்டின் ஆட்சியாளர்கள் செய்யப்பட்ட தற்போது செய்து கொண்டிருக்கின்ற செயற்பாடுகளால் இந்த சந்தேகம் எழுந்துள்ளது.

எமது இழப்பீடு கிடைக்கின்றதல்லவா என்று அமைச்சரொருவர் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இலங்கையில் பாரிய டொலர் பற்றாக்குறை காணப்படுகிறது. எனவே அரசாங்கம் இதனை டொலரைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு வழிமுறையாக இதனை பயன்படுத்தியுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

கப்பல் கடலில் மூழ்கினால் பரவாயில்லை , எமக்கு இழப்பீடு கிடைக்கிறதல்லவா என்ற வகையிலேயே அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. இவை அனைத்திற்கும் அரசாங்கம் தெளிவானதொரு பதிலைக்கூற வேண்டும்.

இது தொடர்பில் ஒவ்வொரு அமைச்சர்களும் ஒவ்வொரு கருத்துக்களை தெரிவித்த போதிலும் , இந்த சம்பவம் எமது கடற்சூழலுக்கும் மீன்பிடி செயற்பாடுகளுக்கும் பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளுக்கும் மீள் செய்ய முடியாத பிரச்சினைகள் இதனால் தோற்றம் பெற்றுள்ளன.

கப்பலில் முழுமையாக தீ பரவும் வரை ஏன் அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது என்றும் , எமது கடற்பிராந்தியத்திலிருந்து அதனை அப்புறப்படுத்துவதற்கும் ஏன் முடியாமல் போனது என்றும் கேள்வி எழுகிறது.

பல கேள்விகளுடனேயே கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கிறது. சில பிரச்சினைகள் காலத்தால் மறக்கடிக்கப்பட்ட வரலாறு இலங்கையில் காணப்படுகிறது. இந்த பிரச்சினையையும் கடலில் மூழ்கச் செய்ய அரசாங்கம் முயற்சிக்கிறா என்று தோன்றுகிறது.

எனவே சுயாதீன விசாரணையொன்றின் ஊடாக உண்மை நாட்டுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும். குறைந்தது 5 வருடங்கள் ஆட்சியைக் கைப்பற்றும் ஆட்சியாளர்களுக்கு பல்லாண்டு காலம் நாட்டில் சீரழிவுகளை ஏற்படுத்த உரிமை கிடையாது.

இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு அரசியல் தலைமைத்துவம் , அதிகாரிகள் குழாமிற்கு எதிராக நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இதுவே எம்முடையதும் நாட்டு மக்களதும் நிலைப்பாடாகும். ஆனால் அரசாங்கம் அதற்கான நடவடிக்கை எடுக்குமாறு என்பது சந்தேகமே என்றார்.