(இராஜதுரை ஹஷான்)
கொவிட் அச்சுறுத்தலால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 5000 ரூபாய் நிவாரணம் வழங்கும் செயற்திட்டம் நேற்று புதன்கிழமை ஆரம்பமானது. அதற்மைய நேற்று மாத்திரம் 2,36,932 குடும்பங்களுக்கு 5000 ஆயிரம் ரூபா நிவாரண நிதி  வழங்கப்பட்டுள்ளதாக  சமுர்த்தி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தினால் பொருளாதார  ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தெரிவு செய்யப்பட்ட  அடிப்படையில்  5000 ஆயிரம் ரூபா நிவாரண நிதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக 30 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இம்முறை ஒரு குடும்பத்திற்கு ஒரு நிவாரண நிதி அதாவது, 5000 ஆயிரம் ரூபா மாத்திரமே வழங்கப்படும். கடந்த காலத்தை போன்று ஒரு குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பல கட்டமைப்பின் கீழ் 5000 ஆயிரம்  ரூபா வழங்கப்படமாட்டாது.

இந்நிவாரண நிதியை பெற்றுக் கொள்ள 5,45,387 குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளன. நிவாரண நிதியை பெற்றுக் கொள்ளாதவர்கள் மேன்முறையீடு செய்து அதனைப் பெற்றுக் கொள்ள முடியும். நேற்றுகாலை வரை கொழும்பு மாவட்டத்தில் நிவாரணம் பெற தகுதியுடைய 53, 273 குடும்பங்களில் 25, 994 குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டத்தில் நிவாரணம் பெற தகுதியுடைய 1,36,399 குடும்பங்களில் 29,309 குடும்பங்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று குருநாகலை மாவட்டத்தில் 1,68, 958 குடும்பங்களில் 23, 770 குடும்பங்களுக்கும் , பதுளை மாவட்டத்தில் 74, 795 குடும்பங்களில் 26 ,358 குடும்பங்களுக்கும், மன்னார் மாவட்டத்தில் 22 ,895 குடும்பங்களில் 15 ,418 குடும்பங்களுக்கும், யாழில் 75 ,999 குடும்பங்களில் 15, 000 இற்கும் அதிகமான குடும்பங்களுக்கும், அம்பாறை மாவட்டத்தில் நிவாரணம் பெற தகுதி பெற்றுள்ள 87, 256 குடும்பங்களில் 14, 750 குடும்பங்களுக்கும் இதுவரையில் 5000 ரூபா வழங்கப்பட்டுள்ளது.  

5000 ஆயிரம் நிவாரண நிதி வழங்கல் குறித்து சமுர்த்தி இராஜாங்க அமைச்சர்  செஹான் சேமசிங்க குறிப்பிட்டதாவது,

 கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு நாடு தழுவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில்  நிவாரண நிதி வழங்களில் சற்று தாமதம் ஏற்படலாம். ஆகையால் தான்  நிவாரண நிதி வழங்கும் காலம்  மட்டுப்படுத்தப்படவில்லை. ஆகவே கிராம சேவகர் அலுவலங்களிலும், நிவாரண நிதி வழங்கல் மையங்களிலும்  பொது மக்கள் கூட்டம் கூட்டமாக செல்வதை தவிர்த்துக்  கொள்ள வேண்டும.

நிவாரண நிதியை பெற்றுக் கொள்ள தகுதிப் பெற்றுள்ளவர்களின் பெயர் விபரங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. பொது மக்கள்  தமக்கு நிதி கிடைக்காமல் போய்விடுமா என்று அச்சம்  கொள்ள தேவையில்லை என்றார்.