சுகாதார தொழிற்சங்கத்தின் ஒன்றியம் மற்றும் மன்னார் சுகாதார உத்தியோகஸ்தர்கள் இணைந்து 14 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இன்று வியாழக்கிழமை மதியம் 12 மணியளவில் மன்னார் பொது வைத்தியசாலை வளாகத்தினுல் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

கொவிட்-19 தொற்று நோய் தொடர்பான முடிவெடுத்தலில் ஒருங்கிணைந்த தொழிற்சங்க குழுவையும் இணைத்தல், வைத்திய சாலை பணிக்குழுவினருக்கு தங்கு தடையின்றி தேவைப்படும் சுய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும், வைத்தியசாலையில் உள்ள கொவிட் கட்டுப்பாட்டு குழுவில் தொழிற்சங்க பிரதி நிதிகளையும் இணைத்துக் கொள்ளவேண்டும், பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்று நிரூபத்திற்கு அமைய கர்ப்பிணி சுகாதார துறைசார் ஊழியர்களுக்கு விசேட விடுமுறைக்கான சுற்று நிரூபம் வெளியிடப்பட வேண்டும், பயணத் தடை காலத்தில் சுகாதாரத் துறை சார் பணிக்குழுவினருக்கு விசேட போக்குவரத்து வசதி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும், அணைத்து பணிக்குழு வெற்றிடங்களையும் நிறப்ப வேண்டும், கொவிட் தடுப்பூசி இது வரை ஏற்றாத பணிக் குழுவினருக்கு உடனடியாக ஏற்ற வேண்டும் உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கையை முன் வைத்து  ஒரு மணி நேர அடையாள கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படாது விட்டால் விரைவில் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளவுள்ளதாக போரட்டக் காரர்கள் தெரிவித்துள்ளனர்.