எம்.மனோசித்ரா

சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளுடன் இலங்கை ஒத்துழைப்புடன் செயற்படுகின்றமையை மேற்குலக நாடுகள் விரும்புவதில்லை.

அதன் காரணமாகவே பங்காதேஷ் செய்த சிறிய நிதியுதவியும் பாரியளவில் இலங்கை மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. அதற்கமைய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்தில் ஏதேனும் சதித்திட்டங்கள் இடம்பெற்றிருக்கவும் வாய்ப்புள்ளது என்று மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் சிறிபால அமரசிங்க தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இணையவழியூடாக இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கேட்க்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பொலிஸ் திணைக்களம் , குற்ற விசாரணைப் பிரிவு என்பவற்றால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கப்பல் நிறுவனத்துடனும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கப்பல் பணியாளர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. துரதிஷ்டவசமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எவ்வாறிருப்பினும் இவ்விடயம் தொடர்பில் ஆழமாக அவதானம் செலுத்தினால் ஏதேனுமொரு இடத்தில் சதித்திட்டம் இடம்பெற்றிருக்கவும் வாய்ப்புள்ளது. இல்லை என்று கூற முடியாது. காரணம் இந்த கப்பலின் செயற்பாடுகள் தொடர்பில் எமக்கு தெரியாத தகவல்கள் பல உள்ளன.

எவ்வாறிருப்பினும் ஜனாதிபதி மற்றும் துறைக்கு பொறுப்பான அமைச்சுக்களின் செயலாளர்கள் இது தொடர்பில் உரிய தீர்மானங்கள் எடுப்பர் என்று நம்புகின்றோம்.

ஆசியா குறித்து மேற்குலக நாடுகளினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் திருப்தியுடையவை அல்ல என்பது நாட்டிலுள்ள அரசியல்வாதிகள் அரச அதிகாரிகள் அறிவார்கள். எனினும் அதிஷ்டவசமாக எம்மால் பாதுகாக்க முடிந்துள்ளது.

அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை இரத்து செய்வதில் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டிருந்தன. நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அதனை இரத்து செய்ய முடிந்தது. அந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் நாடு பிளவடைந்திருக்கும்.

எவ்வாறிருப்பினும் தற்போதுள்ள ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அவ்வாறான ஒப்பந்தங்களிலிருந்து விலகி ஆசிய நாடுகளின் ஒத்துழைப்புக்களைப் பெற்று செயற்படுகிறது.

சீனா உள்ளிட்ட நாடுகளுடன் இலங்கை ஒத்துழைப்புடன் செயற்படுவதை மேற்குலக நாடுகள் விரும்புவதில்லை. பங்களாதேஷ் சிறிய உதவிக்காக இலங்கை மீது பாரியளவில் அவதூறு பரப்பப்பட்டது. எனவே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறவும் வாய்ப்புள்ளது என்றார்.