இன்றைய தலைமுறை, முதன்முறையாக இப்படியொரு பெருந்தொற்றுச் சூழலுக்கு முகங்கொடுத்திருக்கிறது.

இது, உடலுக்கும் மனதுக்கும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சூழல் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இத்தாக்கத்தை வெற்றிகொண்டால் மட்டுமே வரவிருக்கும் சிறப்பான காலத்தை நேர்மறைச் சிந்தனையோடு அணுக முடியும் என்பதும் தவிர்க்க முடியாத உண்மையாக இருக்கிறது.

தொற்று, ஊரடங்கு, தொழில் முடக்கம், முகக் கவசம், தொற்று நீக்கி என்று, இன்றைய சூழலின் அனைத்து பிரதான அம்சங்களுமே, வயது, பால், இன, சமய, மொழி வேறுபாடின்றி, மக்கள் மனங்களில் புதியதொரு நோயை ஏற்படுத்தியிருக்கிறது. அது, எதிர்மறை எண்ணம் என்ற நோயே!

சிறுவர்கள்:

பாடசாலைகள் கல்வியூட்டும் நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்வதில்லை. கூடவே, நட்பு, போட்டி மனப்பான்மை, பழக்க வழக்கம் போன்ற பல முக்கியமான அம்சங்களை பாடசாலைகளில் இருந்தே குழந்தைகள் கற்றுக்கொள்கின்றனர். 

இந்த வாய்ப்பு தற்போதைய சூழலில் அவர்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. இதனால், அவர்களது பழக்கவழக்கங்களில் ஒரு மாறுதல் நிச்சயமாகத் தெரியும். குறிப்பாக, வீட்டில் ஒரே பிள்ளை என்ற சூழலில், நிச்சயமாக அவர்களது மனங்களில் ஒருவித இறுக்கம் தோன்றும். அது, கோபமாகவும் பிடிவாதமாகவும் மாறும். இதை, பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தச் சூழலில் பிள்ளைகளின் கற்றல் ஆர்வம் பாதித்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் குழந்தைகளைப் படிக்குமாறு பெற்றோர் நச்சரித்தால், சகஜ நிலை தோன்றிய பின் பாடசாலைக்குச் செல்லும் எண்ணம் பிள்ளைகள் மனங்களில் சோர்வை ஏற்படுத்தலாம்.

மேலும் இணையவழி பாடத் திட்டங்களும் பிள்ளைகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவே செய்யும். எனவே, கற்றல் நடவடிக்கைகள் தவிர, குழந்தைகளுடன் பெற்றோர் சகஜமாகப் பேசிப் பழகி, விளையாடி அவர்களை மகிழ்விக்க வேண்டும் என்கிறார்கள் குழந்தைகளுக்கான மனோதத்துவ நிபுணர்கள். ஆனால், எக்காரணம் கொண்டும் குழந்தைகள் அளவுக்கதிகமாக இணையப் பயன்பாட்டில் இருப்பதற்கான வாய்ப்புகளை அளித்துவிடக்கூடாது என்றும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பெண்கள்:

பெண்கள் எப்போதும் தன் குடும்பத்தின் எதிர்காலத்தை மனதில் சுமப்பவர்கள். அவர்களிடம் இந்த கொவிட் சூழல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குடும்ப வருமானம் குறைந்திருப்பது அல்லது தடைப்பட்டிருப்பது, குழந்தைகளின் கல்வி, குடும்பத்தினரின் ஆரோக்கியம் என்பன அவர்களைச் சொல்லொணாத அளவுக்கு வாட்டி வதைக்கவே செய்யும். இதனால், அவர்கள் ஒரு நிலையில் இல்லாது, கோபம், வெறுப்பு, கவலை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாக வாய்ப்புகள் அதிகம். இதை ஆண்கள் புரிந்துகொண்டு, அவர்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்வது, குடும்ப நலனுக்கு மிகவும் இன்றியமையாதது.

அதேவேளை, பெண்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். தமக்கு மட்டுமன்றி, முழு உலகுக்குமே இதே நிலைதான் என்பதே அது. காலம் நிச்சயமாக மாறத்தான் போகிறது. நலிந்தவர்கள் சிறக்கத்தான் போகிறார்கள். இருள் விலக, ஒளி பரவத்தான் போகிறது. பெண்கள் இந்த உண்மையை மனதில் இருத்திக்கொண்டு நம்பிக்கையுடன் வாழப் பழக வேண்டும்.

ஆண்கள்:

ஆண்களைப் பொறுத்தவரை, அவர்களது மனோபாவம் எப்படியும் இல்லாமல், ஒரு நிலையில் இல்லாமல் இருந்துகொண்டிருக்கும். தினசரி உழைப்பையே கடமையாகக் கொண்டவர்கள், தங்களது தொழிற்றிறன் பயனின்றி முடக்கப்பட்டிருப்பதால் மிகுந்த அசௌகரியமாக உணர்வார்கள். அவர்களுக்கும் மேலே சொன்னதுதான்.

அதாவது, இந்தக் காலத்தில், நீண்ட காலமாக வீட்டில் செய்யாமல் விடுபட்ட வேலைகள் அனைத்தையும் செய்து முடிக்கலாம். வீட்டு வேலைகளில் பங்கெடுத்துக்கொள்ளலாம். இப்படியான பணிகளில் பங்கெடுக்கும்போது, தமது திறன் பயன்படுத்தப்படுவதால் அவர்களுக்குச் சற்று ஆசுவாசம் கிடைக்கும். மாறாக, அலைபேசியையும் தொலைக்காட்சியையும் மட்டும் துணைக்கு வைத்துக்கொள்வதால் நிச்சயமாக அவர்கள் மனத்தாக்கத்துக்கு உள்ளாவர்கள்.

எனவே, இச்சூழல் தணிகிற வரையில், குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு அல்லது புரிந்துகொள்ள முயன்றும் நம்பிக்கையுடன் செயல்களை ஆற்றியும் விடுபட்ட வேலைகளைப் பூரணப்படுத்திக்கொண்டும் பயனுள்ள முறையில் இயங்குவார்களேயானால், விடிகின்ற காலம் அவர்கள் வாழ்க்கையிலும் விடிவை ஏற்படுத்தும்.