தமிழினத்தினது அறிவுப் பொக்கிஷமான யாழ்.பொதுநூலகம் திட்டமிட்டு அழிக்கப்பட்ட நாளின் அழியா நினைவலைகளுக்கு இன்றுடன் ஆண்டுகள் நாற்பதாகி விட்டன.

ஆனால் தற்போது வரையில் அழித்தவர்களும் சரி, அழிப்பதற்கு ஏவியவர்களும் சரி சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டதாக இல்லை. ஆகக்குறைந்தது, அழிவுக்கு காரணமானவர்கள் இவர்கள் தான் என்று கூட சட்டரீதியாக எங்கும் அடையளப்படுத்தப்படக்கூட இல்லை.

நூலகம் எரிக்கப்பட்டதன் பின்னர் 1981 ஜூன் 5 ஆம் திகதி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி அதன் தலைவர் பீட்டர் கெனமன் தலைமையில், யாழ்ப்பாணம் சென்று அழிவுகளைப் பார்வையிட்டு வெளியிட்ட அறிக்கையில், “நாட்டின் இந்தப் பகுதியை எதிரி அரசின் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தைப்போல, அரசாங்கம் நடத்தும் வரை யாழ்ப்பாணத்தில் இயல்பான நிலைமைகளை மீட்டெடுப்பது சாத்தியமில்லை என்று எமது கட்சி உறுதியாக நம்புகிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அறிவுப்பொக்கிஷம் அழிக்கப்பட்டு தசாப்தமொன்று கடந்திருந்த நிலையிலேயே, 1991 ஒக்டோபர் 25 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச, “வடக்கு, கிழக்கில் தற்போதைய நிலைமையை ஏற்படுத்தியவர்கள் யார் என்று பார்க்கையில் அதற்குப் பிரதானமான காரணம் காமினியே” என்று பகிரங்மாகக் குறிப்பிட்டார்.

அத்துடன் “இதற்கு எமது கட்சியின் சிலரும் துணைபோனர்கள். பத்து வருடங்களுக்கு முன்னதாக நிகழ்ந்த சம்பவங்கள் இந்நாட்டின் இனங்களுக்குடையிலான உறவுகளில் இது ஒரு கரை படிந்த துரயரமானவையாகும்” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

பின்னர் 2006 ஆம் ஆன்டில் ஜனாதிபதியாகிய மஹிந்த ராஜபக்ஷ, “1983இல் தமிழர்களுக்கு எதிரான கலவரங்கள் மற்றும் படுகொலைகள், யாழ்ப்பாண நூலகத்தை எரித்தல் ஆகியவற்றுக்கு ஐக்கிய தேசியக் கட்சியே பொறுப்பு” என்றார்

அதன்பின்னர்,  2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற பொதுநிகழ்வொன்றில் அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவும் “அந்த துன்பகரமான சம்பவத்திற்கு மன்னிப்புக் கோருகின்றேன்” என்று குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் விழிப்புணர்வுக் குழுவின் தலைவரும் சர்வதேச மன்னிப்பு சபையின் இலங்கைக்கான உண்மை அறியும் ஆணைக்குழுவின் தலைவருமாகச் செயற்பட்ட ஓர்வில் எச். ஷெல் 1981 ஆம் ஆண்டிலேயே “இக்குற்றங்களுக்கு எவரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. ஐ.தே.க. அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவுமில்லை” என்று கூறியிருந்தார்.

இவை, வெறுமனே ஏட்டுப்பதிவுகளாவே இருக்கின்றன. இந்தக் கூற்றுக்களால் நிகழ்ந்தது எதுவுமில்லை. இனி எதுவும் நிகழ்ந்துவிடும் என்று ஆழ நம்பவும் முடியாது.

அறிவுப் பொக்கிஷத்தின் தோற்றம்

யாழ். நூலகம், அரசாங்கத்தின் அல்லது பொருளாதார நிலைத்தன்மை பெற்ற ஏதேனும் குழுவின் உதவியால் தோற்றம் பெற்றதொன்றல்ல. 1933ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தமிழ் சமூகத்தின் கல்விசார்  வளர்ச்சியின் மேல் பற்றுறுதி கொண்ட மு.ஆ.செல்லப்பா என்பவரால் நூலகம் ஒன்றினை அமைப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது.

அவரது யோசனைக்கு இணக்கம் தெரிவித்து, நூலக உருவாக்கத்தில் ஆர்வம் காட்டிய தனது நட்பு வட்டத்தில் உள்ளவர்களைக்கொண்டு, 1934ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் திகதி சிறியதொரு வாசகர்சாலை உருவாக்கப்பட்டது.

பின்னர் அக்காலப்பகுதியில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிவானாக இருந்த ஐசாக் என்பவரை தலைவராகவும், கே.எம்.செல்லப்பாவை செயலாளராகவும் கொண்டு நூலகமொன்றை அமைப்பதற்கான பணிகள் நகர்த்தப்பட்டன. குறித்த குழுவினரின் தீவிர முயற்சியால் இரண்டே மாதங்களுக்குள் யாழ்.பொது நூலகத்துக்காக, யாழ். வைத்தியசாலை வீதியில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அங்கு 844 புத்தகங்கள் சேர்க்கப்பட்ட நிலையில் இக்குழுவினர் நூலகத்திற்கான அடுத்தகட்ட பயணத்தை ஆரம்பித்தனர். சில செய்தி பத்திரிகைகள், சஞ்சிகைகள் என்று அனைத்தையும் சேகரித்தனர்.

அத்தோடு, யாழில் இருந்து வெளிவந்துகொண்டிருந்த ‘இந்து சாதனம்’ எனும் பத்திரிகையில் நூலகத்துக்கான அறிமுகம் மற்றும் நூலக வளர்ச்சிக்கு தேவையான உதவிகள் தொடர்பாக விளம்பரம் செய்ய ஆரம்பித்தனர்.

அந்த விளம்பரத்துடன் யாழ்.நூலகத்துக்காக பலமான அடிகள் எடுத்து வைக்கப்பட்டன. அதனடிப்படையில், 1935ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் பிரதான வீதியில் அமைந்துள்ள கட்டடத்துக்கு யாழ்.நூலகம் இடம் மாற்றம் பெற்றது. 

அதன்பின்னர் 1936 ஆம் ஆண்டு யாழ். நகரசபைக் கட்டடம் தீர்மானிக்கப்பட்டு சற்றே விஸ்திரமாக இயங்க ஆரம்பித்தது.

நிரந்தக் கட்டடத்தில் இயங்க ஆரம்பித்தமையே முதல் அங்கீகாரம் என்ற பெருமிதத்துடனும் அந்த அங்கீகாரம் வெறுமனே கட்டடங்கள் சார்ந்த, புத்தகங்களின் எண்ணிக்கை சார்ந்த வளர்ச்சிக்கு கிடைத்தவையல்ல. 

மாறாக தமிழ் சமூகத்தின் அறிவுத்தேடலுக்கு தீனி போடக் கிடைத்த பொக்கிஷமாவே கருதப்பட்டது.

1949 ஆம் ஆண்டு யாழ். நகரசபை இலங்கையின் இரண்டாவது மாநகரசபையாக தரமுயர்த்தப்பட, அதன் புதிய மேயராக சாம். சபாபதி பொறுப்பேற்றுக்கொண்டார்.

அவர் தனது பங்கிற்கு யாழ். பொதுநூலகத்திற்கு பிரத்தியேக கட்டடம் தேவை என்று சபையில் முன்மொழிந்தார். குறித்த முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன் மூலம் உருவானது தான் யாழ். பொது நூலகம்.

தமிழ் அறிவுசார் சமூகத்தின் பொக்கிஷமான பொதுநூலகத்திற்கான புதிய கட்டடம் கட்டுவதற்கு 1953 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டது. 

கட்டட வடிவமைப்புக்காக துறைசார் வல்லுநர்கள் இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்டனர். அவர்களில் நரசிம்மன் மற்றும் பேராசிரியர். ரங்கநாதன் ஆகியோர் முக்கியமானவர்கள்.

யாழ்.பொது நூலக கட்டட நிர்மாணப்பணிகளுக்காக அமைக்கப்பட்ட குழுவிற்கு வணக்கத்துக்குரிய லோங்க் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். நூலகம் அமைப்பதற்கான நிதி சேகரிப்புகள் பல்வேறு வகைகளில் முன்னெடுக்கப்பட்டன. குறித்த முன்னெடுப்புக்கான நிதி சேகரிப்புகளுக்காக கேளிக்கை களியாட்ட நிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் பலராலும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இவ்வாறு பலரது முயற்சிகளுக்கு மத்தியில் கட்டியெழுப்பப்பட்ட அறிவுப் பொக்கிஷத்தின் முதற்கட்ட பணிகள் 1959 ஆம் ஆண்டும் அதன் பின்னரான ஏனைய மேம்பாட்டு வேலைகள் 1970 களின் முதல் பகுதிகளிலும் நிறைவுக்கு வந்தன. 

இதன் பின்னர் ஒட்டுமொத்த இலங்கைத்தீவிலும் ஏன் முழு தெற்காசியப் பிராந்தியத்திலுமே தவிர்க்க முடியாத சின்னமாக தன்னை உருமாற்றிக் கொண்டது தமிழின அறிவுப் பொக்கிஷமான யாழ். பொது நூலகம்.

இந்த உருமாற்றம் விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கும் தமிழினத்தின் அறிவூற்றாக இருந்தமை, வன்மம் மிகுந்திருந்த சிங்கள பேரினவாதத்திற்கு மெல்லமெல்ல உறுத்த ஆரம்பித்தது.

அரங்கேற்றப்பட்ட திட்டமிட்ட அழிப்பு

இவ்வாறு நூலகத்தின் வரலாறு இருக்கையில், 1977ஆம் ஆண்டு ‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’ நிறைவேற்றப்பட்டதன் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் எழுச்சியால் சினமடைந்திருந்த அப்போதைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன தமிழர்களை மாவட்ட சபைகளுக்குள் கட்டப்படுத்த திட்டமிட்டார்.

அதற்காக மாவட்ட சபைத் தேர்தலை 1981 இல் அறிவித்ததோடு 1970 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸின் சார்பில் வட்டுக்கோட்டை தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிட்ட ‘தமிழினத் தளபதியாகத் திகழ்ந்த அமிர்தலிங்கத்தைத் தோற்கடித்து பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியிருந்த அ.தியாகராஜாவை, ஐக்கிய தேசிய கட்சி தனது வேட்பாளராகத் தெரிவு செய்தது.

யாழ்.மாவட்டத்தில் தமிழ் வேட்பாளர்கள் எவரும் பேரின கட்சிகளின் சார்பில் தேர்தலில் போட்டியிடக் கூடாது என விடுதலைக்காக ஆயுதமேந்திய இளைஞர்கள் எச்சரிக்கை செய்திருந்தபோதும் அதனைமீறி தேர்தல்களமிறங்கிய தியாகராஜா தேர்தலுக்கு முதல்வாரம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த நிகழ்வு ஐக்கிய தேசியக் கட்சிக்கு பேரதிர்ச்சியாகவும் இதனால் ஜே.ஆரின் பணிப்புரையில், அப்போதைய அரசாங்கத்தில் முக்கிய அமைச்சர்களாக இருந்த காமினி திஸாநாயக்கவும் சிறில்மத்தியூவும் அவருடைய நூற்றுக்கணக்கான சகபாடிகளும் யாழ்.மாவட்ட சபையை கைப்பற்றியே தீருவோம் என்று சபதமிட்டு யாழ்ப்பாணக்கு வருகை தந்தனர்.

தேர்தல் பிரச்சாரங்கள் உச்சத்தினை அடைந்திருந்த நிலையில், மேலும் வன்முறைகள் நிகழலாம் என, அச்சம் அதிகரித்திருந்த நிலையில் நூற்றுக்கணக்கான பொலிஸார் குடாநாடெங்கும் குவிக்கப்பட்டனர்.

1981 மே 31 ஆம் திகதி அன்று யாழ்.நாச்சிமார் கோவிலடியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் தமிழர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் சிங்கள பொலிஸார் ஒருவர் மரணம் அடைந்தார்.

அவ்வளவுதான்.

எங்கிருந்து வந்தார்கள் என்று தெரியாது. எப்படி வந்தார்கள் என்று தெரியாது. படைபடையாக வந்த சிங்களவர்கள் தமிழர்கள் மீது ஆவேசமான தாக்குதல்களைத் தொடுத்தார்கள்.

இவ்வாறு படைபடையாக வந்த சிங்களவர்களில் இராணுவத்தினர், இனவெறியர்கள், வன்முறையாளர்கள், பொலிஸார் என்று அத்தனை பிரினவரும் உள்ளடங்கியிருந்தனர்.

முதலாவதாக இலங்கையில் முதல் தமிழ்ப் பத்திரிகை என்ற பெருமைக்குரிய ஈழநாடு பத்திரிகை அலுவலகம் தீக்கிரையானது. யாழ்ப்பாணம் நாச்சியார் கோயிலின் தேர் தீப்பற்றியது. பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீட்டுக்குத் தீயிடப்பட்டது. அவருடைய வாகனமும் எரியூட்டப்பட்டது. தமிழர்களின் வீடுகள், கடைகள், வாகனங்கள் அனைத்திற்கும் தீயூட்டினர். அந்த வன்முறை யாழ்.நகரை நோக்கி தீயாய் பரவியது.

இவர்கள் யாழ்.நூலகத்துக்குள் நுழைந்தனர். தடுத்து நிறுத்திய காவலாளியை தள்ளினர். கைவசம் கொண்டுவந்த பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் கொண்டு நூலகத்தின் ஒவ்வொரு பகுதியாக தீவைத்தனர். பெற்றோல் குண்டுகளை வீசினார்கள்.

இந்த வன்முறையால் நூலகத்தின் மேற்கு மூலை பகுதிதான் முதலில் எரியத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக நூலகத்தின் அடுத்தடுத்த பகுதிகளும் எரியத் தொடங்கின.

நூலகம் எரிந்துகொண்டிருக்கும் செய்தி மாநகரசபை ஆணையாளர் சிவஞானத்துக்குக் கிடைத்தது. அவர், உடனடியாக தீயணைப்பு வீரர்களையும் மாநகரசபை ஊழியர்களையும் நூலகத்துக்கு அனுப்பினார். “தீயை அணையுங்கள், ஆவணங்களைக் காப்பாற்றுங்கள்” என்று உத்தரவிட்டார்.

அதன்படி நூலகத்தை நெருங்கிய தீயணைப்பு வீரர்களைத் தடுத்து, மேலிடத்து உத்தரவு என்று கூறி பொலிஸார் தடுத்து நிறுத்தினார்கள். கலாநிதி ஆனந்த குமாரசுவாமி நூற்தொகுதி, சி. வன்னியசிங்கம் நூற்தொகுதி, ஐசாக் தம்பையா நூற்தொகுதி, கதிரவேற்பிள்ளை நூற்தொகுதி, அமெரிக்காவில் இருந்து நன்கொடையாக வந்திருந்த நூற்தொகுதிகள் உட்பட நூலகத்துக்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்த 97000 நூல்கள் கருகிச் சிதைந்தன.

கிடைப்பதற்கு அரிய நூல்கள்

இந்தச் சிதைவில் ஐசாக் தம்பையா நன்கொடை கொடுத்த இலக்கியம், சமயம், மொழியியல் தத்துவம் தொடர்பாக சுமார் 6000 நூல்களும், இந்திய வர்த்தகர் ஒருவரால் கொடுக்கப்பட்ட மகாத்மா காந்தியின் சத்தியசோதனை, 1672 ஆம் ஆண்டில் பிலிப்பஸ் பால்டியார் என்பவர் எழுதிய டச்சு ஆட்சியில் இலங்கை என்னும் நூல், 1660 ஆம் ஆண்டில் கண்டி மன்னரால் சிறைபிடிக்கப்பட்டவேளை றொபேட் நொக்ஸ் என்பவர் எழுதிய இலங்கையராவார் என்னும் நூல் ஆகியவை அழிந்தன.

1585 ஆம் ஆண்டில் கத்தோலிக்க மதத்தலைவர்களால் தமிழில் எழுதப்பட்ட நூல், சேர் பொன்னம்பலம் இராமநாதன் எழுதிய பகவத்கீதை விளக்கம், சித்தாந்தம், செந்தமிழ் இலக்கிய நூல்கள், திருமதி இராமநாதன் அம்மையார் எழுதிய இராமாயான மொழிபெயர்ப்பு, மகாகவி பாரதியாரின் நண்பரான நெல்லையப்பன் எழுதிய நூல்கள், கடலைக்குடி நடேச சாஸ்திரியார் எழுதிய சோதிட சாஸ்திர நூல்கள், வானசாஸ்த்திரம் சம்பந்தமான நூல்கள், சித்தவைத்திய வாசகங்கள் அடங்கலான ஏட்டுச்சுவடிகள் ஆகியவை அழிந்தன.

மேலும், முத்துத்தம்பிப்பிள்ளை ஏழுதிய அபிதானகோசம், சிங்காரவேலு  முதலியார் எழுதிய அபிதான சிந்தாமணி, முதலியார் இராசநாயகம் எழுதிய புராதன யாழ்ப்பாணம், சுவாமி ஞானப்பிரகாசம், முத்துத்தம்பிபிள்ளை எழுதிய யாழ்ப்பாணம் பற்றிய நூல்கள், கல்லடி வேலன் என்று அழைக்கப்பெற்ற கே.வேலுப்பிள்ளை இயற்றிய யாழ்ப்பாண வைபவகௌமுகி, சிற்பக்கலை பற்றிய நூல்கள், தனிநாயக அடிகளார் பதிப்பித்து வெளியிடப்பட்ட“தமிழ் கலாசாரம்” எனும் ஆங்கில சஞ்சிகை, இராசையனார், வன்னியசிங்கம், கதிரவேற்பிள்ளை, ஆனந்தகுமாரசாமி மற்றும் முதலியார் குலசபாநாதன் சேகரித்த நூல்கள் மற்றும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட கையெழுத்து பிரதிகளும் அழிவடைந்தன.

ஏரியூட்டல் ஏற்படுத்திய பெருந்தாக்கம் யாழ்.நூலகம் எரிக்கப்பட்ட செய்தி தாயகத் தமிழர்களை மட்டுமல்ல தமிழக மற்றும் உலகத் தமிழர்களையும் அதிர்ச்சியில் உறையச் செய்தது.

நூலக எரிப்புச் செய்தி கேட்டு கொழும்புத்துறையில் உள்ள குருமடத்தில் தங்கியிருந்த வணக்கத்துக்குரிய டேவிட் அடிகளார், அதிர்ச்சியில் மரணம் அடைந்தார். எரிப்பை நேரடியாகப் பார்த்த பற்குணம் என்பவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டது. இவ்வாறான பல நிகழ்வுகள் அரங்கேறின.

கருகிய நூலக கட்டடத்தொகுதியை மீளத் திருத்தாது யாழ். மாநகரசபை அதை இன அழிப்பின் சின்னமாக வைத்திருந்தது. அதன்பின் பக்கத்தில் ஒரு புதுக்கட்டடத்தை முன்னிருந்த கட்டடத்தைப் போல் கட்டுவதற்கு தீர்மானித்தது.

இப்பணிக்கு முழுநேர பொறியியலாளராக நியமிக்கப்பட்டவர் பொறியியலாளர் ந.நடேசன் ஆவார். அக்கட்டிடத்தின் கட்டடக் கலைஞராக நியமிக்கப்பட்டவர் வி.எஸ்.துரைராஜா ஆவார்.

1984 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அக்கட்டிட வேலைகள் முடிந்தன. குறைந்தளவான நூற்தொகுதிகளுடன் நூலகம் மீள் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் 1988 ஆம் ஆண்டு ஆரம்பித்த யுத்தத்தில் புதிய கட்டிடமும், ஏற்கனவே எரிக்கப்பட்ட கட்டடமும் பாரிய சேதத்துக்குள்ளாயின.

பதின்னான்கு ஆண்டுகளின் பின் 1999 ஆம் ஆண்டு கட்டடத்தைப் புனரமைக்கத் தீர்மானிக்கப்பட்டு முன்பிருந்த கட்டிடம் போல அமைப்பதற்காக இடிந்த பாகங்களைத் தேடி அவைகளைப் படமெடுத்து, வரைந்து தற்போதைய கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு 2004இல் பொதுமக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ளது.

புதிய கட்டடம் வந்தாகிவிட்டது. சொற்ப அளவில் நூல்களும் கிடைத்துவிட்டன. கதிரைகள், மேசைகள், என்று தளபாடங்களும் ஆளணிகளும் கிடைத்துவிட்டன.

ஆனால் இற்றைவரையில் நூலகத்தை கருக்கிச் சிதைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. அவர்கள் சார்ந்த அரசியல் கட்சிறும் பொறுப்புக்கூறவில்லை.

அந்த அரசியல் கட்சிதான் குறித்த சம்பவத்திற்கு காரணம் என்றுரைத்த மற்றைய பிரதான கட்சியும் அதுகுறித்து நடவடிக்கைகளை எடுக்கவில்லை. நாற்பது ஆண்டுகள் கடந்தும் இப்பாரிய அழிப்புக்கான நீதி நிலைநாட்டப்படவில்லை; பொறுப்புக் கூறப்படவில்லை; தண்டனை அழிக்கப்படவுமில்லை;

ஆனால் நீதிக்கான ஏக்கம் இன்றளவும் நீடித்துக்கொண்டுதான் இருகின்றது. இந்த அறிவுப்பொக்கிஷ அழிப்பின் தாக்கம் தமிழினத்தின் பரம்பரை கடந்தும் ஆறாத வடுவாகியிருக்கிறது.

பெயரளவில் ஜனநாயக சோஷலிசக் குடியரசாக இருக்கும் இலங்கையின் அன்றைய நிலைமையும் இன்றைய நிலைமையும் ஒன்றுதான்.

(தொகுப்பு:- ஆர்.ராம்)