(எம்.மனோசித்ரா)
எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கெப்டன், பிரதான பொறியியலாளர்,  பிரதி பொறியியலாளர் ஆகியோரிடம் நேற்று வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது கப்பலின் கெப்டனிடம் 14 மணித்தியாலங்களும் , பிரதான பொறியியலாளரிடம் 13 மணித்தியாலங்களும் , பிரதி பொறியியலாளரிடம் 12 மணித்தியாலங்களும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவர்களிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட வாக்குமூலங்கள் மற்றும் சட்டமா அதிபரின் ஆலோசனைகளையும் பெற்று குற்ற விசாரணைப் பிரிவினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

குற்ற விசாரணைப் பிரிவின் மேலதிக பொலிஸ் அதிகாரி , பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மூவர் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினரால் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் விசேட நிபுணர்களின் நிலைப்பாடுகளையும் பெற்றுக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குற்ற விசாரணைப் பிரிவினர், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.