(இராஜதுரை ஹஷான்)

 நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களும்  இன்று செவ்வாய்கிழமை மீள திறக்கப்படும்.

கடந்த 14 நாட்களுக்குள் வியட்நாம் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டவர்கள் மற்றும்  வியட்நாம் நாட்டு சுற்றுலாப்பயணிகள்  நாட்டிற்குள் வருவதற்கு மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கடுமையான சுகாதார பாதுகாப்பு கட்டுப்பாடுகளுடன் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் மீள ஆரம்பிக்கப்படும் என சிவில் விமான சேவைகள்  இராஜாங்க அமைச்சர் டி. வி சானக தெரிவித்தார்.

  விமான  நிலையங்கள் மீள திறத்தல் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

புதுவருட கொவிட்  கொத்தணி தாக்கத்தை கருத்திற் கொண்டு இலங்கைக்கான அனைத்து  பயணிகள் விமான சேவைகள் கடந்த மாதம் 21 ஆம் திகதி நள்ளிரவு முதல் நிறுத்தப்பட்டது. கொவிட் -19 வைரஸ் ஒழிப்பு மற்றும் கட்டுப்பாட்டு தேசிய  மையத்தின்  யோசனைக்கு அமைய இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

 சுகாதார பாதுகாப்பு கட்டுப்பாடுகளுக்கமைய நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களையும்  இன்று செவ்வாய்கிழமை திறக்க கொவிட் கட்டுப்பாட்டு தேசிய மையம் அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கைக்கு வரும் விமானத்தில் 75 பயணிகள் மாத்திரமே அனுமதிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 கடந்த 14 நாட்களுக்குள் வியட்நாமிற்கு சுற்றுப்பயணம்  மேற்கொண்ட பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகள்  இலங்கைக்கு வருவதற்கும், விமான நிலையங்களில் தரையிறங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை இத்தடை நீடிக்கப்படும்.

சிவில் விமான சேவைகள் அதிகாரசபை விடுத்த கோரிக்கைக்கு அமைய இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. இவ்விடயம்  அனைத்து விமான நிலையங்களின் நிர்வாக பிரிவினருககும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வியட்நாம் நாட்டில் தற்போது  வேகமாக பரவி வரும் கொவிட்  தொற்றை கருத்திற் கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

  வெளிநாட்டு சுற்றுலாப்பிரயாணிகள் இலங்கைக்கு வரும் போது பின்பற்ற வேண்டிய கட்டாய சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் கடந்த காலங்களில் சிறந்த முறையில் செயற்படுத்தப்பட்டன. அவற்றை மீள்திருத்தம் செய்து  செயற்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

 இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் அவர்களின் நாட்டின் செய்துக் கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொவிட் -19 வைரஸ் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தும் ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும். அதாவது  இலங்கைக்கு வருவதற்கு முன்னர் 14 நாட்களுக்குள் செய்துக் கொண்ட பி . சி.  ஆர் பரிசோதனை அறிக்கை.

இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னர் அவர்கள் கட்டாயம் 10 - 14 நாட்களுக்கு  தனிமைப்படுத்தப்படுவார்கள்.  இடைப்பட்ட காலத்தில் பிறிதொரு பி. சி. ஆர் பரிசோதனை செய்யப்படும்.   சுற்றுலாத்துறை அதிகார சபை அறிவுறுத்தியுள்ள  ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் மாத்திரம் சுற்றுலாப்பிரயாணிகள் தங்க முடியும். என்றார்