(எம்.எம்.சில்வெஸ்டர்)

பிரான்ஸில் நடைபெற்றுவரும் 125  ஆவது பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டியில் மகளிர் முதற் சுற்றுப் போட்டிகளில் முன்னணி வீராங்கனைகளான விக்டோரியா அசரென்கா, பெட்ரா கிவிட்டோவா, நவோமி ஒசாக்கா ஆகியோர் வெற்றியீட்டி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.

முதல் சுற்றுப் போட்டியில் ரஷ்யாவின் ஸ்வெட்லான குஸ்நெட்சோவாவை எதிர்கொண்ட பெலாரசின் விக்டோரியா அசரென்கா, முதல் மற்றும் கடைசி செட்டை வென்று (6க்கு 4 , 2க்கு 6 , 6க்கு 3) இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

ஏனைய முதற் சுற்றுப்போட்டிகளில் ஜப்பானின் நவோமி ஒசாக்கா ரோமானியாவின் பெட்ரிசியா மரியா (6 க்கு 4, 7 க்கு 6 (7/4)) என்ற கணக்கில் வெற்றியீட்டினார். பெல்ஜிய வீராங்கனையான கிறீட் மின்னென்னை எதிர்கொண்ட செக் குடியரசு  வீராங்கனையான பெட்ரா குவிட்டோவா  6 க்கு 7 (7/3), 7 க்கு 6 (7/5), 6க்கு1 கடுமையாகப் போராடி வெற்றியீட்டினார்.

மகளிர் நடப்புச் சம்பியான போலாந்தின் ஈகா ஸ்வியாடெக் இன்றைய தினம் தனது முதல் சுற்றில் ஸ்லோவேனியாவின் கஜா ஜுவானை எதிர்கொள்ளவுள்ளார். இப்போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பாகும்.

மேலும், அமெரிக்காவின் செரீனா வில்லயம்ஸ் பங்கேற்கும் போட்டி இன்று நள்ளிரவிலும், தரவரிசையில் முதல் நிலை வீராங்கனையான அவுஸ்திரேலியாவின் அஷ்லி பார்ட்டியின் போட்டி நாளைய தினமும் இடம்பெறவுள்ளன.