கருத்துச்சுதந்திரம் என்ற போர்வையில் அடுத்தவர்களின் தனிப்பட்ட விடயங்களில் தலையிடுதல் மற்றும் பொதுவெளியில் கூச்சமின்றி வசைபாடுதல், விமர்சித்தல் என்பவை இன்றைய டிஜிட்டல் உலகில் ஸ்மார்ட் போனின் அதிகரித்த அசுர வேகத்தில் அதனோடு சேர்ந்து அதிகரித்துச் செல்வதை நாளாந்தம் காண்கின்றோம். வெறுப்புப் பேச்சுக்கள், போலிச் செய்திகளுக்கும் பஞ்சமில்லை. 

குறிப்பாக, பெண்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்கள் என நோக்கும்போது இதில் ஆண்களே அதிகளவில் ஈடுபடுகின்றனர், மற்றும் ஆண்களுக்கு சொந்தமான சமூக ஊடக வலைத்தள கணக்குகளில் இருந்தே பெரும்பாலும் அவ்வாறான விடயங்கள் பரப்பப்படுகின்றன என்ற விடயத்தை இலங்கையில் சமூக ஊடகங்கள் தொடர்பாக பணியாற்றும் மற்றும் சமூக ஊடக பதிவுகள் தொடர்பாக ஆராயும் ஹேஷ்டக் ஜெனரேஷன் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக நம் சமூகத்தில் பெண்களுக்கு எதிரான மூன்று வகையான வெறுப்புப் பேச்சுக்கள் பரப்பப்படுவதாக ஹேஷ்டக் ஜெனரேஷன் அமைப்பின் இணை நிறுவுனரும் பணிப்பாளருமான செனெல் வன்னியாராச்சி குறிப்பிடுகின்றார்.

• அன்றாட வாழ்க்கையில் பெண்களின் தனிப்பட்ட தகவல்களை பொதுவெளியில் பகிர்ந்து கொள்வது. அவர்கள் அறியாமலேயே அல்லது அவர்கள் நம்பும் நபருடன் அவர்கள் நம்பிக்கையுடன் பகிர்ந்து கொள்ளும் படங்கள் மற்றும் வீடியோக்களை பின்னர் அவர்களின் அனுமதியின்றி பொதுவெளியில் வெளியிடல்.

• அரசியல் மற்றும் ஊடகங்கள் போன்ற சிவில் சமூகத்தில் முன்னணியில் வந்த பெண்கள் மீதான தாக்குதல். அரசியல் அரங்கில் விமர்சனங்களை எதிர்பார்க்கலாம் மற்றும் அவ்வாறு செய்ய ஒருவருக்கு உரிமை உண்டு. ஒரு பெண் மீதான இத்தகைய தாக்குதல்கள் ஆண்கள் மீதான தாக்குதல்களிலிருந்து மிகவும் வேறுபட்டவை. இத்தகைய தாக்குதல்கள் குறிப்பாக அவர்களின் பாலுணர்வை நோக்கமாகக் கொண்டவை.

• சமூக ஊடகங்களில் என்ன நடக்கிறது என்பதிலிருந்து தவறான தகவல்கள் பிரிக்கப்பட்டிருந்தாலும், இந்த விஷயங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு வகையான துன்புறுத்தல் என்பது ஒருவரைப் பற்றிய தவறான தகவலை வேண்டுமென்றே வெளியிடுவதாகும். அவர்கள் செய்யாத அறிக்கைகளை பகிர்ந்துகொள்வது, குறிப்பாக அரசியலில் பெண்கள் பற்றி விமர்சிப்பதை குறிப்பிடலாம்.

ஆண்களும் பெண்களும் ஒரு குடும்பமாக, ஒன்றாக கல்விகற்று, ஒன்றாக தொழில்செய்து, ஒன்றாக வாழ்கின்றனர். ஆனால், சமூக வெளிக்கு வரும்போது எவ்வித தயக்கமும் இன்றி வெறுப்புப் பேச்சை கையாள்வதற்கு காரணம் என்ன? இது பற்றி செனல் வன்னியாராச்சியிடம் கேட்டபோது, பெண்களுக்கு எதிரான பாகுபாடு சமூக ஊடகங்களில் மட்டுமன்றி, கல்வித்துறை, பணியிடம் என சகல இடங்களிலும் பாகுபாடு காட்டப்படுகின்றது. அனைவரையும் சமமாக மதிக்க வேண்டும் என்ற விடயம் சிறுவயது முதல் கற்பிக்கப்படாமை இதற்கு ஒரு காரணம். ஒவ்வொருவருடைய தனியுரிமையையும் பாதுகாக்கவேண்டியது மிகவும் அவசியம். எமது சமூகத்தின் அன்றாடம் இடம்பெறும் விடயங்களில் எவ்வளவு கண்ணியத்துடன் செயற்படுகின்றோமோ, அதே நிலையை இணையத்திலும் கடைப்பிடிப்பது அவசியம். வெளியிடத்தில் காணப்படும் மனித உரிமை போன்ற விடயங்கள், இணையத்திலும் உண்டு என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும் என்றார்.

இதே விடயத்தை ஓய்வுநிலை பேராசிரியையான சித்ரலேக்கா மௌனகுருவிடம் வினவியபோது, பெண்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு ஏற்கனவே சமூகத்தில் நிலவுகின்றது. போக்குவரத்தில், பொது வெளியில், வீட்டில் பெண்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்கள் இடம்பெறுவதை நீண்ட காலமாக நாங்கள் பார்த்து வருகின்றோம். இதற்கு முக்கியமான காரணம் சமூக கலாசார கருத்தியலின் வெளிப்பாடு என்றுதான் கூறவேண்டும் அதாவது பெண் அடக்கியாளப்படுவதற்கு உரியவள் என்ற கருத்தின் ஒரு தொடர்ச்சியாகவே சமூக ஊடகங்களில் இத்தகைய வெறுப்பு பேச்சுக்களை காண்கின்றோம். சமூக ஊடகங்களின் வளர்ச்சியும் அதனை இலகுவாக கையாளக்கூடிய தன்மையும் பெரும்பாலானோருக்கு இலகுவாக கிடைக்கின்ற நிலையும் சமூக ஊடகங்களில் ஊடாடும் பெண்களை இலக்குவைக்கின்றனர்.

அதிலும் முற்போக்கான கருத்துகளை தெரிவிக்கும் பெண்கள், அதிகார கட்டமைப்பை நோக்கி கேள்வி கேட்கும் பெண்களை நோக்கித்தான் இவ்வாறான வெறுப்புப் பேச்சை கட்டவிழ்த்து விடுகின்றனர். இவ்வாறான கருத்தியல்கள் பெண்கள் மத்தியில் இருந்து வரக்கூடாதென நினைப்பதே இதற்கு காரணம். பெண்களை மௌனிக்க வைப்பதற்கு அவர்களை மோசமாகக் கதைத்தல் வசைபாடுதல் இப்படியான விடயங்களை கையாள்கின்றனர். பெண்கள் இதற்கு பயந்து பின்வாங்கிவிடுவர், அவர்களது கருத்துகளை வெளியிடாமல் தடுக்கலாம், பெண்களை கதைக்கவிடாமல் தடுக்கலாம் என நினைக்கின்றனர். இவ்விடயம் பரவலாக எல்லா இடமும் சென்றடைவதால், பெண்கள் இதிலிருந்து பயந்து பின்வாங்கும் நிலையும் காணப்படுகின்றது. தமது சொந்த வாழ்க்கையிலும் பிரச்சினைகளை ஏற்படுத்துமென கருதி, பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறுவதோடு சமூக ஊடக பயன்பாட்டை முடக்கிக்கொள்கின்றனர் எனக் குறிப்பிட்டார்.

இன்றைய சமூக ஊடகங்களை எடுத்து நோக்கும்போது, ஏதேனும் ஒரு துறையில் முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கும் பெண்களுக்கு எதிரான வசைபாடல்கள் இடம்பெறுகின்றதை காணலாம். குறிப்பாக கடந்த தேர்தல் காலங்களில் பெண் வேட்பாளர்களின் முகப்புத்தகங்களில் இடம்பெற்ற கருத்தாடல்கள் இதற்கு ஒரு உதாரணம். அதுமட்டுமன்றி சமூக செயற்பாடுகள், சினிமா, பாடல் என எதுவாக இருந்தாலும் பெண்கள் இலக்குவைக்கப்படுகின்றதை அன்றாடம் இணையவெளியில் காண்கின்றோம். சமூக ஊடகத்தில் ஆதிக்கம் செலுத்தும் இளைஞர்கள் இதுபற்றி என்ன கூறுகின்றனர்?

“வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் அவதூறு சமீபத்திய காலங்களில் சமூக வலைப்பின்னல் தளங்களில் பரவி வருகின்றமை ஆண்களின் அறியாமையா அல்லது அவர்களின் பொழுதுபோக்கா என தெரியவில்லை என்றார் அவிசாவளையைச் சேர்ந்த ஸ்ரீலஸ்தாரி.

''தனிப்பட்ட வெறுப்பின் காரணமாக ஒட்டுமொத்த பெண் சமூகத்தையும் தவறாக சித்தரிப்பது மற்றும் எழுதுவது ஒரு மன நோய்'' என்றார் இரத்தினபுரியைச் சேர்ந்த செல்லா சாமிநாதன்.

''பொதுவெளியில் இடப்படும் இவ்வாறான கருத்துக்களை பார்த்து நாம் மனரீதியாக பாதிக்கப்பட்டால், அவ்வாறு செய்பவர்கள் தங்கள் நோக்கம் நிறைவேறிவிட்டதென கருதுகின்றனர். பெண்களின் முன்னேற்றத்தை தடுப்பதே இவர்களது நோக்கம் என நான் கருதுகின்றேன் என்றார் களுத்துறையைச் சேர்ந்த அரவிந்தி.

''நாங்கள் ஆண்கள், எனவே நாம் எதை வேண்டுமானாலும் செய்யலாம், நாங்கள் செய்யும் அனைத்தும் சரியானது என்று ஆண்கள் நினைக்கிறார்கள். அந்த மனநிலையே இதற்கு காரணம்'' என்றார் கண்டியைச் சேர்ந்த சில்வியா.

''ஒரு பெண் ஜனாதிபதியாக இருந்தாலும், அவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் செயல்பட முடியாது என்பதை நாங்கள் வரையறுத்து வைத்துள்ளோம். ஒரு பெண் அந்த எல்லைகளுக்கு அப்பால் செயல்படும்போது, தம்மை மீறி அவள் செயற்படுவதாக ஆண்கள் நினைக்கிறார்கள். விட்டிற்குள் என்றால், அவர்களை தாக்க முற்படுகின்றனர். சமூக வெளிக்கு வரும்போது அவதூறுகளைப் பயன்படுத்தினால், பெண்கள் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்திவிடுவார்கள் என்று ஆண்கள் நினைக்கிறார்கள். அதற்காக அவர்கள் பயன்படுத்தும் ஆயுதமே வெறுப்புப் பேச்சு'' எனக் குறிப்பிட்டார் சாய்ந்தமருதைச் சேர்ந்த மொஹமட் ருஃபினாஸ்.

''பெண்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்லர். பெண்கள் எல்லா துறைகளிலும் சமமான நிலையில் பிரகாசிக்கும் ஒரு நேரத்தில், அங்கு ஆணாதிக்க போக்குகள் மேலோங்குகின்றன. பெண்கள் மென்மையான மனம்; கொண்டவர்கள். எனவே அவர்களை பாதிக்கும் சொற்களை ஆண்கள் பயன்படுத்துகிறார்கள். நீங்கள் அவர்களை உணர்வுபூர்வமாக தாக்கினால் அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவார்கள் என்று நினைக்கும் மனப்பான்மையே இதற்குக் காரணம்'' என்றார் கொழும்பைச் சேர்ந்த தக்கீஷன்.

''நீங்கள் பார்க்கும் கண்ணோட்டத்தை பொருத்தே எல்லாம் தீர்மானிக்கப்படுகின்றது. ஆனால் ஆண்களை விட பெண்களே உண்மையானவர்கள், வலிமையானவர்கள் மற்றும் தூய்மையானவர்கள்'' என்றார் கொழும்பைச் சேர்ந்த ஹரிசுதன்.

'' ஒரு பெண்ணை ஆபாசமாக எழுதுவதும் பேசுவதும் ஒரு சமூக குற்றமாக பதிவு செய்யப்பட வேண்டும்'' என்றார் பரகடுவ என்ற பிரதேசத்தைச் சேர்ந்த ரொனால்ட் ரிகான்.

தாம் பார்க்கின்ற விதமும் இதற்கு ஒரு காரணம் என்பது பெரும்பாலா இளைஞர்களின் கருத்தாக உள்ள நிலையில், இவ்வாறான ஒரு உளவியல் மாற்றம் எங்கிருந்து ஆரம்பமாகின்றது என்பதை கண்டறிவது அவசியம். குடும்ப மனநல மருத்துவர் அத்ஹாரா சாதிக் இதுபற்றி குறிப்பிடுகையில், சமூக வலைத்தளத்தில் பெண்களை விமர்சிப்பது, ஒரு பெண்ணை அவமதிப்பது மற்றும் அவளை போகப்பொருளாக பயன்படுத்துவது இன்றைய சமகால உலகில் ஒரு பொதுவான நிகழ்வாக மாறிவிட்டது. கல்வி, பாதுகாப்புப் படைகள், ஆளுகை போன்ற துறைகளில் பெண்கள் பல வழிகளில் முன்னேறி வருகின்றனர். இதைப் பொறுத்து, ஏற்றுக்கொள்ள முடியாத ஆண் சமூகம் அவர்களை அவதூறாகப் பேசுகிறது மற்றும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து விமர்சிக்கிறது.

அவர்களின் மனநிலையில் உள்ளதை நாம் உளவியல் ரீதியாகப் பார்க்கும்போது, பெண்கள் தமது வீட்டுச் செல்வங்களை திருமணத்திற்கு பின்னர் எடுத்துச் சென்றுவிடுவார்கள் என ஆண்கள் கருதுகின்றனர். அதுபோலவே, தனது வீட்டு பெண்களை போல ஏனைய பெண்களையும் நினைக்க வேண்டும் என்று சிந்திப்பதில்லை. அந்த சிந்தனையை அவர்களுக்கு ஏற்படுத்துவது அவசியம்'' என்றார்.

மேல்டாவைச் சேர்ந்த ஊடகவியலாளரும், எழுத்தாளரும் ஊழலுக்கு எதிரான செயற்பாட்டாளருமான தப்னே கருவானா கலிசியா, இணையத்தில் பெண்கள் குறிப்பாக உளரீதியான, பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை எதிர்கொள்வதாக நேர்காணலொன்றில் குறிப்பிட்டிருந்தார். 2017ஆம் ஆண்டு அவர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட அதேநேரம், இறப்பதற்கு முன்னர் இணையத்தின் மூலம் பல வகையில் தாக்கப்பட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஒரு பொது வெளியில் ஆண்கள் தயக்கமின்றி இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான சமூகவியல் மற்றும் உளவியல் காரணங்கள் தொடர்பாக பெண்ணியவாதியும் கலைஞருமான கமலா வாசுகி இவ்வாறு குறிப்பிட்டார்.

'' சமூகங்கள், மத நிறுவனங்கள், ஊடகங்கள், கல்வி மற்றும் அரசு போன்ற நிறுவனங்களால் அவர்களுக்கு போதிக்கப்படும்''ஆண்மை'' என்பது, குடும்பத்திற்குத் தேவையான வேலையைச் செய்து, வீட்டின் வரையறைக்குள் ஒரு பெண்ணை வைத்திருப்பதாகும் என நினைக்கின்றனர்.

பெண்கள் இந்த எல்லைகளை மீறி செயற்படும்போது, அதாவது, அவர்கள் பொதுவெளிக்கு வரும் போது, அவர்கள் விரும்பும் ஒரு விஷயத்தைப் பற்றி தெரிவிக்கும்போது, அவர்கள் சுயமாக தீர்மானங்களை எடுக்;கும்போது, சமுதாயத்திற்கான தீர்மானங்களை எடுக்கும்போது, அவற்றின் குரலாக ஒலிக்கும்போது, தங்கள் ஆண்மைக்ரிய கடப்பாடுகளை தவறவிட்டு விடுகின்றோம் என ஆண்கள் கருதுகின்றனர்.

இவர்களை திருத்தி, மீளவும் குடும்பப் பெண்கள் என வரையறுக்கப்படுகின்ற அந்த வரையறைக்குள் அவர்களைத் திருப்பித் தள்ளுவது தங்கள் பொறுப்பாக ஆண்கள் கருதுகிறார்கள். இல்லையெனில் அவர்களை தாக்கலாம் என்று நினைக்கிறார்கள். 

அத்தகைய பெண்களுக்கு எதையும் செய்வது ஆண்களின் உரிமையும் கடமையும் என்று ஆண்கள் நினைக்கிறார்கள். இன்று சினிமா போன்ற விஷயங்களுடன், இந்த நிலைமை இன்னும் மோசமான கருத்துருவாக்கங்களை ஏற்படுத்துகிறது.

எனவே, பெண்களுக்கு எதிராக எந்த உரிமை மீறலையும் செய்யாமல், தாங்கள் பயன்படுத்தும் எல்லா இடங்களுக்கும் பெண்களும் உரிமை உடையவர்கள் என உணரக்கூடிய வகையில் ஆண் குழந்தைகள் வளர்க்கப்படாதவரை, இந்த தவறான ஆண்மை பற்றிய கருத்துருவாக்கம் எமது சமூகத்தில் இருக்கும் வரை இந்த பிரச்சினை சமூகத்தில் இருக்கும். சமூக வலைத்தளங்கள் மட்டுமன்றி எந்த இடத்திலும் பெண்களை தாக்குவதை தங்கள் உரிமையென ஆண்கள் கருதுவது மாற்றப்பட வேண்டும்'' என்றார்.

இணையத்தில் குறிப்பாக போலிக்கணக்குகள் மூலமாக ஒருவரை மறைந்திருந்து தாக்கும் நிலை தொடர்ச்சியாக அதிகரிக்கின்றது. போலிக்கணக்கு அச்சுறுத்தலுக்கு தீர்வுகாணும் வகையில், கணக்குரிமையாளரின் சொந்தப் பெயரை பயன்படுத்துமாறும், சந்தேகிக்கும் பட்சத்தில் அடையாள அட்டை கோரப்படும் என்றும் ஒரு சந்தர்ப்பத்தில் பேஸ்புக் அறிவுறுத்தல் விடுத்திருந்த போதும், போலிக்கணக்குகளுக்கு பஞ்சமில்லை. சமூக வலைத்தளங்களில் இடம்பெறும் இவ்வாறான விடயங்களை நாம் முறைப்பாடு செய்ய முடியும் என்றாலும், அதற்கு நடவடிக்கை எடுப்பது தாமதமாகின்றது. 

சமூக வலைத்தளங்கள் ஆங்கிலத்தை அடிப்படையாக கொண்டுள்ளதால், எமது மொழியில் உள்ள விடயங்களை ஆராய்ந்து அறிந்துகொண்டு அதற்கேற்ப நடவடிக்கை எடுப்பது பல சந்தர்ப்பங்களில் சாத்தியப்படுவதில்லை. இவ்வாறான சூழ்நிலையில், சமூக வலைத்தளங்களில் குறிப்பாக முகப்புத்தகத்தில் பரப்பப்படும் வெறுப்புப் பேச்சுக்கள் தொடர்பான பேஸ்புக் நிறுவனத்துடன் ஹேஷ்டக் அமைப்பு இணைந்து செயற்படுகின்றது. இலங்கையில் இவ்வாறான விடயங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழிகாட்டல்களை வழங்குவதோடு, இவற்றை நிவர்த்திப்பதற்கான அணுகுமுறைகளுக்கும் உதவி செய்கின்றது.

ஆகவே, அதன் பணிப்பாளர் செனலிடம், இவ்வாறான வெறுப்புப் பேச்சை தவிர்க்க என்ன செய்யலாம் என வினவினோம். ''இரண்டு விடயங்களை என்னால் குறிப்பிட முடியும். இணையத்திற்கு வெளியே நாம் ஆர்வமுடன் கதைக்கும் சகல விடயங்களையும் இணைய வெளியிலும் சிரமமின்றி கதைக்கும் நிலை காணப்பட வேண்டும். இணையத்தை எவ்வாறு பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவது என்பது பற்றிய புரிதலும், டிஜிட்டல் பாதுகாப்பைக் கற்பிக்க கற்றுக்கொள்ளவும் வேண்டும். முக்கியமாக, பேஸ்புக் மற்றும் கூகிள் போன்ற சமூக ஊடக நிறுவனங்கள் பொறுப்பை ஏற்க வேண்டும் மற்றும் இந்த வகையான தீங்கு விளைவிக்கும் இடுகைகளை அகற்ற வேண்டும் என்று நான் நம்புகிறேன். நம் நாட்டில் தோன்றும் இடுகைகள் மற்றும் உதாரணமாக சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் பரவும் இடுகைகள், பொதுவாக மேற்கத்திய நாடுகளில் இடுகையிடப்படும் ஆங்கில உள்ளடக்கத்திற்கு இணையாக எளிதில் அகற்றப்படாது. எனவே, பயன்படுத்தப்பட்ட மொழியைப் பொருட்படுத்தாமல், இதுபோன்ற தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் இந்த தளங்களில் இருந்து முற்றிலும் அகற்றப்படுவதை உறுதி செய்வதில் அந்த நிறுவனங்களுக்கு ஒரு பாரிய பொறுப்பு உள்ளது. பொறுப்பான நிறுவனங்களான நாமும் இதை முன்னோக்கி கொண்டு வந்து அதற்கு பொறுப்புக் கூற வேண்டிய கடமை உள்ளது'' என்றார்.

ஓய்வுநிலை பேராசிரியை சித்ரலேகா மௌனகுருவும் இதற்கான சில யோசனைகளை முன்வைத்தார். ''பெண்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்களை எதிர்கொள்ள அல்லது குறைக்க ஆண் மேலாதிக்கத்துக்கு எதிராக நாம் இதுவரை காலமும் முன்னெடுத்த சமூக ரீதியான விடயங்களை தொடர்வது முக்கியமானது.

1. அதற்கெதிராக பேசுதல், எழுதுதல், இயக்கங்களாக செயற்படுதல். 

2. இதனைக் கண்டு பயந்து பின்வாங்கி விடாமல் தன்னுடைய கருத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது அடுத்து முக்கியமான விடயமாகும்

3. இணையத்தில் வெறுப்பு பேச்சை தடைசெய்யும் சட்டங்களை ஏற்றுவதற்கான பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டும். அதாவது சட்ட ரீதியான விடயங்களை முன்னெடுப்பதற்கான தூண்டுதல்களை மேற்கொள்ள வேண்டும்.

இங்கு நான் மூன்றாவதாக குறிப்பிட்ட விடயத்தை எவ்வளவு வெற்றிகரமாக செயல்படுத்த முடியும் என இப்போது கூறமுடியாது. எனினும், இயன்றவரை அவற்றை முயற்சித்து பார்ப்பது சிறந்தது என கருதுகிறேன்'' என்றார்.

சமூக ஊடகங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களில் தமக்கெதிராக வெளியிடப்படும் கருத்துக்களை பெண்கள் தயக்கமின்றி முன்வைக்க வேண்டுமென வேண்டுமென அண்மையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டிருந்தார். அத்தோடு, இவ்வாறான விடயங்களை முறையிட 011- 2320141 என்ற விசேட இலக்கமும் இலங்கை பொலிஸின் சைபர் குற்றங்கள் தொடர்பான பிரிவு அறிவித்திருந்தது.

எவ்வாறாயினும், தமக்குரியதென ஆண்கள் நினைக்கும் சகல விடயங்களுக்கும் பெண்களும் உரித்தானவர்கள் என்ற உண்மையை ஆண்கள் உணரும் பட்சத்தில் இப்பிரச்சினை தீரும் என்பது நிதர்சனம்.

கலாவர்ஷ்னி கனகரட்ணம்