(எம்.மனோசித்ரா)

இலங்கை சைனோபார்ம் தடுப்பூசி ஒன்றின் விலை 15 டொலர் (3030 ரூபா) என்று தெரிவித்துள்ள போதிலும் , பங்களாதேஷ் அதனை 10 டொலருக்கு கொள்வனவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

அரசாங்கம் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை அரசியல் மயப்படுத்தியுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அமைச்சு பதவியை பொறுப்பேற்குமாறு கபீருக்கு சஜித் ஆலோசனை | Virakesari.lk

இன்று ஞாயிறுக்கிழமை அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட் ஒழிப்பு தொடர்பில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள அனைத்து வேலைத்திட்டங்கள் தூரதிஷ்டவசமாக தோல்வியடைந்துள்ள நிலையில், தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டமும் முழுமையாக சீர் குழைந்துள்ளது. 

தடுப்பூசியை உரிய நேரத்தில் பெற்றுக் கொள்ளல் , நிதி ஒதுக்கீடு, மனித வளத்தை பயிற்றுவித்தல், தடுப்பூசிகளைப் பகிர்ந்தளித்தல், அவற்றை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மற்றும் யாருக்கு முன்னுரிமையளிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட காரணிகளில் ஆரம்பத்திலிருந்தே அரசாங்கத்திடம் முறையானதொரு வேலைத்திட்டம் காணப்படவில்லை.

நாட்டு பிரஜைகள் அனைவருக்கும் தேவையான தடுப்பூசிகளை முன்னரே பதிவு செய்யுமாறு நாம் பல சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தை வழியுறுத்திய போதிலும் , அவற்றை கவனத்தில் கொள்ளாமல் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டது.

நாட்டில் 60 வீதமானோருக்கு வழங்குவதற்கு 3 கோடி தடுப்பூசிகள் தேவையாகும். எனினும் கடந்த 5 மாதங்களில் அஸ்ட்ரசெனிகா , சைனோபார்ம் மற்றும் ஸ்புட்னிக் ஆகிய 3 வகையான தடுப்பூசிகளிலுமே 20 இலட்சம் மாத்திரமே பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதற்கமைய இன்னும் 280 இலட்சம் தடுப்பூசிகள் பற்றாக்குறையாகவுள்ளன.

சிறு சிறு தொகையாக கொள்வனவு செய்யப்படும் தடுப்பூசிகளும் அரசாங்கத்திற்கு தேவையானோருக்கே பெருமளவில் வழங்கப்படுகிறது. உலக சுகாதார ஸ்தாபனத்திடமிருந்து கிடைக்கப் பெறும் தடுப்பூசிகளில் 10 வீதமானவற்றை 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வழங்குவதாக அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதியையும் அரசாங்கம் மீறியுள்ளது.

உலக நாடுகளில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டங்களில் முன்னணி வகிக்கும் நாடு இலங்கையாகும். எனினும் தற்போதைய அரசாங்கம் இதனையும் அரசியல் மயப்படுத்தி தமக்கு வேண்டியோரின் உயிரை மாத்திரமே பாதுகாக்கும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.

இவ்வாறான நிலையில் இலங்கை சைனோபார்ம் தடுப்பூசி ஒன்றின் விலை 15 டொலர் (3030 ரூபா) என்று தெரிவித்துள்ள போதிலும் , பங்களாதேஷ் அதனை 10 டொலருக்கு கொள்வனவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

14 மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அவ்வாறெனில் ஒரு தடுப்பூசி 15 டொலர் என்ற அடிப்படையில் 14 மில்லியன் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள 210 மில்லியன் டொலர் (42 420 மில்லியன் ரூபா) தேவைப்படுகிறது.

ஆனால் பங்களாதேஷைப் போன்று ஒரு தடுப்பூசியை 10 லொலருக்கு கொள்வனவு செய்தால் 14 மில்லியன் தடுப்பூசிகளுக்கு 140 மில்லியன் டொலர் மாத்திரமே செலவாகும். அவ்வாறெனில் எஞ்சிய 70 மில்லியன் டொலருக்கு (14 140 மில்லியன் ரூபா) என்ன ஆயிற்று என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்றார்.