மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள முகத்துவாரம் ஆற்று வாய்ப்பகுதியில் மட்டி எடுப்பதற்கு சென்ற மீனவர் ஒருவர் நேற்று சனிக்கிழமை காணாமல்போன நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) ஆற்றில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ரமேஸ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் சம்பவதினமான நேற்று (29)  மாலை மட்டி எடுப்பதற்காக முகத்துவாரம் ஆற்றுவாய் ஆற்றில் மட்டி எடுப்பதற்காக சென்ற நிலையில் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இதனையடுத்து பொது மக்களும் படையினரும் இணைந்து தோடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது காணாமல் போயிருந்த இளைஞர் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) காலை ஆற்றில் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதவானின் உத்தரவிற்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற திடீர் மரணவிசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் சடலத்தை பார்வையிட்டு, பிரேத பரிசோதனைக்காக  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கும்படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை மட்டக்களப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.