(இராஜதுரை ஹஷான்)
கொவிட்-19 தடுப்பூசி செலுத்தல் குறித்து முறையான திட்டங்கள் வகுக்கப்படவில்லை. அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள வெறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதே தவிர குறைவடையவில்லை. அரசாங்கமும் பொறுப்பற்ற வகையில் செயற்படுகிறது. தற்போதைய நெருக்கடியான நிலை குறித்து பிரதமர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தடுப்பூசி செலுத்தல் குறித்து முறையான திட்டங்கள் வகுக்கப்படவில்லை.  தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக  வரிகைளில் காத்து நிற்கிறார்கள். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் பொருளாதார மட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் இச்செயற்பாடு காணப்படுகின்றன.

 கொவிட் -தடுப்பூசி  வழங்கும் விடயத்தில்  சுகாதார அமைச்சு சிறந்த திட்டத்தை வகுக்கவில்லை. கொவிட்-19 தடுப்பூசி விவகாரம் அரசியல் வியாபாரமாகி விட்டது என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. மொரட்டுவை நகர மேயரின் செயற்பாடு அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. ஆகவே கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் அதிருப்தியளிக்கின்றன.

அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் ஒரு தரப்பினர் அரசாங்கத்திற்குள் இருந்து  முக்கியமான தீர்மானங்களை எடுக்கிறார்கள். இத்தீர்மானங்களினால் நாட்டு மக்கள் நெருக்கடிக்குள்ளாகுகிறார்கள். ஆகவே  இவ்விடயம் குறித்து பிரதமர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.