(செ.தேன்மொழி)
அநுராதபுரம் -பரசன்கஸ்வௌ பகுதியில் சட்டவிரோதமான முறையில் கால்நடைகளை  கடத்தும் நபர்களை கைது செய்வதற்காக சுற்றிவளைப்புகளை மேற்கொண்ட பொலிஸ் உத்தியோத்தர்கள் இருவர், பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நபர் ஆகியோரை தாக்கியமை தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைதாகியுள்ளனர். 

குறித்த நபர்கள் இருவரும் , எதிர்வரும் ஜூன் மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிபொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, பரசன்கஸ்வௌ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சியம்பலேவ பகுதியில் அதிகாலைவேளையில்,  சட்டவிரோதமான முறையில் கால்நடைகள் கடத்தப்படுவதாக , அநுராதபுரம் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சுற்றிவளைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்போது ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களும், பொலிஸாருக்கு தகவல் வழங்கி நபரும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதுடன் , அங்கிருந்த கடத்தல்காரர்கள் இருவரும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரையும் , தகவல் வழங்கிய நபரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்களும் , தகவல் வழங்கிய நபரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்கள் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் ஜூன் மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.