லண்டனிலிருந்து கிழக்கு சஸக்ஸிலுள்ள கடற்கரைக்கு சுற்றுலா சென்ற நண்பர்களான 5 இலங்கையர்கள் மர்மமான முறையில் கடலில் மூழ்கிப் பலியாகியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற இந்த  சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் இலங்கை வம்சாவளியினத்தவர்கள் என நம்பப்படுவதாக குறிப்பிட்டு பிரித்தானிய ஊடகங்கள் இன்று வியாழக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.

எனினும் இறந்தவர்களின் தனிப்பட்ட பெயர் விபரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

உள்நாட்டையும் வெ ளிநாடுகளையும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பய ணிகள் கூடியிருந்த கடற்கரையில் இடம்பெற்ற மேற்படி சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் மூவரின் சடலங்கள் செவ்வாய்க்கிழமை மாலையே கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

பின்னர் அன்றைய தினம் இரவு 8:00 மணியளவில் வேளையில் அவ்வழியாக சென்ற ஒருவரால் கரையொதுங்கியிருந்த ஏனைய இருவரின் சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த சடலங்கள் அரைக் காற்சட்டையும் ரீசேர்ட்டும் அணிந்த நிலையில் காணப்பட்டுள்ளன.

அந்த ஐவரும் லண்டனிலிருந்து வாகனமொன்றில் கிழக்கு சஸெக்ஸிற்கு பயணத்தை மேற்கொண்டிருந்ததாகவும் அவர்களுடன் வேறு நண்பர்களோ குடும்ப உறுப்பினர்களோ வந்திருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அவர்களது ஆடை அணிகள் அவர்கள் சட்டவிரோத குடியேற்றவாசிகள் என்ற ஊகத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாக தெரிவிக்கும் பொலிஸ் வட்டாரங்கள், விசாரணைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் எதனையும் உறுதிப்படுத்திக் கூற முடியாதுள்ளதாக தெரிவித்தன.

அவர்கள் ஐவரும் 25 வயதுக்குட்பட்ட வயதுடைய இளைஞர்களாகத் தோன்றுவதாக தலைமை பொலிஸ் அதிகாரியான டி ரோஸ்கில்லி கூறினார்.

மேற்படி சம்பவத்தில் அந்த ஐவருடன் வேறு எவரும் கடலில் மூழ்கிக் காணாமல்போயுள்ளதாக முறைப்பாடுகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

பிரித்தானிய கரையோர காவல் படையினர் மீட்புக் குழுவினருடன் இணைந்து மீட்பு உலங்குவானூர்திகள், அம்புலன்ஸ் உலங்குவானூர்திகள் மற்றும் உயிர்காப்புப் படகுகள் என்பவற்றைப் பயன்படுத்தி அந்தக் கடல் பிராந்தியத்தில் தேடுதல் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் பிராந்திய அதிகாரிகள் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.