(ஆர்.யசி)

கொவிட் -19 வைரஸ் பரவல் காரணமாக தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 7 ஆம் திகதி  அதிகாலை நான்கு மணிவரையில் தளர்வின்றி நீடிக்கும் எனவும், இடையில் 31ஆம் திகதி மற்றும் 4 ஆம் திகதிகளில் வழங்கவிருந்த பயணக்கட்டுப்பாட்டு தளர்வு குறித்த தீர்மானத்தை நிராகரிக்கவும் கொவிட் செயலணிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். 

தற்போதுள்ள கொவிட் நிலைமையைக் கட்டுப்படுத்த இரண்டு மாதங்களுக்கும் அதிக காலம்  தேவைப்படும் - இராணுவத் தளபதி | Virakesari.lk

பயணக் கட்டுப்பாட்டுக் காலத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை நடமாடும் வர்த்தகர்கள் மூலமாக பெற்றுக்கொடுக்க மாவட்ட செயலாளர்களுக்கு பணித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

நாட்டின் தற்போதுள்ள கொவிட் -19 வைரஸ் பரவல் நிலைமைகளில் நாடு இருவாரகாலம் தொடர்ச்சியாக முடக்கப்பட வேண்டும் எனவும், மக்களின் நடமாட்டங்களையும் அனாவசிய செயற்பாடுகளையும் தடுக்க வேண்டும் எனவும் சுகாதார தரப்பினர் வலியுறுத்தி வருகின்ற நிலையில் இன்று ஜனாதிபதி தலைமையில் கொவிட் -19 செயலணிக் கூட்டம் இடம்பெற்றது. 

இந்த கூட்டத்தின் போது செயலணி உறுப்பினர்கள் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக இரண்டு வாரகாலம் தொடர்ச்சியாக பயணக் கட்டுப்பாடு அல்லது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என சுகாதார தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர். 

இதனை அடுத்தே நீண்ட கலந்துடையாடலின் பின்னர் எதிர்வரும் 7ஆம் திகதி அதிகாலை  4 மணி வரையில் தொடர்ச்சியாக பயணக் கட்டுபாட்டை பிறப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இராணுவத்தளபதி கேசரிக்கு தெரிவிக்கையில் :-

 நாட்டினை முடக்குவது குறித்து பொதுவான இணக்கப்பாடு இல்லாத போதும் தற்போதுள்ள நெருக்கடி நிலைமைகளில் நாட்டினை திறக்க முடியாதுள்ளது. அதுமட்டுமல்ல கடந்த 25 ஆம் திகதி நாடு திறக்கப்பட்ட வேளையில் மக்களின் செயற்பாடுகள் மிக மோசமானதாக அமைந்தது. மக்கள் தமது சுகாதார வழிமுறைகளை சிறிதும் பொருட்படுத்தாது செயற்பட்டனர். 

இந்த ஒரு பிரதான காரணத்தினாலேயே எதிர்வரும் 31ஆம் திகதி மற்றும் ஜூன் 4 ஆம் திகதிகளில் பயணக்கட்டுப்பாட்டை தளர்ப்பதில்லை என்ற தீர்மானத்தை எடுத்தோம்.

கேள்வி:- மக்களின் அத்தியாவசிய தேவைகளை பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் ஏற்படுமே?

பதில் :- ஆம், சிரமங்கள் இருக்கும், ஆனால் இன்றில் இருந்து சகல பகுதிகளிலும் மக்களுக்காக அத்தியாவசிய உணவு மற்றும் மருத்து பொருட்களை பெற்றுக்கொடுக்க விசேட ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படவுள்ளன. கிராம சேவகர் பிரிவுகளின் மூலமாக நாளாந்தம் காலையில் அத்தியாவசிய உணவுகளை வழங்கும் சேவையும், எந்த நேரமும் மருத்துவ சேவைகளை பெற்றுக்கொடுக்கும் வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுக்கப்படும். 

எனவே மக்கள் அனாவசியமாக அச்சம் கொள்ளத்தேவையில்லை. மக்கள் வழமையான விதத்தில் செயற்பட முடியாது என்பதை நாம் உணர்கின்றோம். ஆனால் இப்போதுள்ள நெருக்கடி நிலையில் மக்கள் சிரமங்களை பொறுத்துக்கொண்டு ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும். 

இது ஒரு தரப்பினருக்கு மாத்திரம் ஏற்பட்டுள்ள பாதிப்பு அல்ல. முழு நாடும், முழு உலகமும் எதிர்நோக்கும் அச்சுறுத்தலாகும். ஆகவே இதில் எமது மக்களை பாதுகாக்கவே நாம் இவ்வாறான கட்டுப்பாடுகளை விதிக்கின்றோம் எனவும் அவர் கூறினார்.