(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட் தொற்றாளர்களதும் மரணங்களதும் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகிறது. நேற்றும் இரண்டாயிரத்திற்கும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதோடு , வியாழனன்று 27 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன.

இன்று வெள்ளிக்கிழமை 2845 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இதுவரையில் ஒரு இலட்சத்து 77 706 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களில் ஒரு இலட்சத்து 46 362 பேர் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளதோடு , 29 417 பேர் சிகிக்சை பெற்று வருகின்றனர்.

வியாழனன்று பதிவான மரணங்கள்

நேற்று வியாழக்கிழமை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் 27 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டன. இவை இம்மாதம் 22 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை பதிவானவையாகும். இவ்வாறு உறுதி செய்யப்பட்டவற்றில் 7 மரணங்கள் வீட்டிலேயே பதிவானவையாகும்.

குருத்தலாவ, அகலவத்தை, பொலன்னறுவை, தர்காநகர், மொரப்பிட்டி, களுத்துறை, காலி, வத்தேகெதர, பூஸ்ஸ, புலத்சிங்கள, கடவத்தை, வத்தளை, வெல்லம்பிட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 14 பெண்களும் , படல்கும்புர, கண்டி, வென்னப்புவ, வெலிப்பன்ன, மாத்தளை, அலுத்கம, மக்கொன, கல்பாத்த, பேருவளை, காலி, மில்லவ, நேபொட மற்றும் கொழும்பு-15 ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 13 ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.