(எம்.மனோசித்ரா)
போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த போது மக்கள் மிகுந்த பொறுப்புடன் செயற்பட்டமை வரவேற்கத்தக்கது. எனினும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன்  பின்னர் மக்கள்  தமக்கு தேவையான பொருட்களை  சிக்கலின்றி கொள்வனவு செய்வதற்கான வேலைத்திட்டம் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படவில்லை என்று ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷூ மாரசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

நடந்து சென்று பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறெனில் எரிவாறு சிலிண்டரை கொள்வனவு செய்பவர்கள் எவ்வாறு அதை கொண்டு செல்வார்கள் ? பெண்களால் இதனை கொண்டு செல்ல முடியுமா ? இவ்வாறான விடயங்களை கவனத்தில் கொள்ளாது அரசாங்கம் விதித்துள்ள நிபந்தனைகள் பொறுத்தமற்றவை.

கடந்த சில தினங்களாக கடும் மழையுடனான காலநிலை நிலவுகிறது. இவ்வாறு மழை பெய்யும் போது எவ்வாறு பொருட்களை கொண்டு செல்வது ? மக்களின் சிரமங்கள் தொடர்பில் கவனத்தில் கொள்ளாமல் அரசாங்கம் தீர்மானங்களை எடுத்துள்ளமை பொறுத்தமற்றதாகும் என்றார்.