கொழும்பு துறைமுகத்துக்கு வட மேல் திசையில்,  9.5 கடல் மைல் தூரத்தில், கொழும்பு துறைமுகத்துக்குள் நுழையும் நோக்குடன் நங்கூரமிடப்பட்டிருந்த சரக்குக் கப்பலில் பரவிய தீ காரணமாக கப்பலில் இருந்த பல கொள்கலன்கள் கடலில் விழுந்துள்ளன.

குறித்த கொள்கலன்களில், இரசாயன பதார்த்தங்கள் இருந்த நிலையில்,  குறித்த கொள்கலன்கலையோ, அல்லது கடலில் மிதந்து வரும்  அக்கப்பலில் இருந்த பதார்த்தங்கள் என சந்தேகத்துக்கு இடமான பொருட்களையோ பொது மக்கள் தொடுவதிலிருந்து தவிர்ந்திருக்குமாறு சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரனி  தர்ஷனி லஹந்தபுர தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த கப்பலில் எரிந்த பகுதிகள் தற்போது நீர்கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய கடற்கரைப்பகுதிகளில் மிதந்து கரையொதுங்கியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பொருட்களை எக்காரணம் கொண்டும் தொட வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கும் இதே எச்சரிக்கையை மீனவத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமும் விடுத்துள்ளார்.

இன்றைய தினம் குறித்த கப்பலில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக 8 கொள்கலன்கள் கடலில் விழுந்துள்ளன. அதில் மூன்று கொள்கலன்களில்  எபொக்ஸிரிசின் எனும் இரசாயன பதார்த்தம் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.  

இந்த இரசாயனம் ஊடாக மூச்சுத் திணறல் மற்றும் ஒவ்வாமைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே கடலுக்கு செல்லும் மீனவர்களும் கடலோர மக்களும் மிக அவதானமாக இருக்க வேண்டும் எனவும் கடலில் மிதந்து வரும் கொள்கலன் அல்லது சந்தேகத்துக்கு இடமான பொருட்களை தொடுவதில் இருந்து தவிர்ந்திருக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

 குறிப்பாக கொழும்பு, களுத்துறை, நீர் கொழும்பு மீனவர்கள், மக்கள் அவதானத்துடன் இருக்குமாரும் அவ்வாறான கொள்கலன்கள் அல்லது பொருட்களை கண்டால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கோ அல்லத்கு உரிய அதிகாரிகளுக்கோ அறிவிக்குமாறு பொது மக்கள் கேட்கப்பட்டுள்ளனர்