பொலிவுட் நடிகை திஷா பதானி, இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகும் 'புஷ்பா' என்ற படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆட ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

பொலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கான் நடிப்பில் அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற 'ராதே' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் பொலிவுட் நடிகை திஷா பதானி. 

தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடிப்பதற்காக இவரைத் தேடி ஏராளமான வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. இருப்பினும் அவர் தென்னிந்திய மொழி படங்களில் நடிக்க தொடர்ந்து தயக்கம் காட்டி வந்தார்.

இந்நிலையில் பொலிவுட்டின் முன்னணி நடிகைகளான சோனம் கபூர், அலியா பட் உள்ளிட்ட பலரும் பிரபாஸ், ஜுனியர் என்டிஆர் போன்ற முன்னணி தென்னிந்திய நட்சத்திரங்களின் திரைப்படங்களில் நடித்தனர். 

இதனைத்தொடர்ந்து நடிகை திஷா பதாணியும், அல்லு அர்ஜுன் கதையின் நாயகனாக நடித்து இரண்டு பாகங்களாக வெளியாகவிருக்கும் 'புஷ்பா' படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இது தொடர்பாக அவருடைய தரப்பில் விசாரிக்கும் போது,

'அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகும் படத்தில் இடம்பெறும் பாடலும், பாடலுக்கான நடன காட்சிகளும் யூட்யூபில் மில்லியன் கணக்கிலான பார்வைகளை பெற்று சாதனை படைக்கும். 

அதனால் அவருடைய நடன அசைவில் உருவாகும் 'புஷ்பா' படத்தில் இடம்பெறும் பாடலுக்கு அவருடன் இணைந்து நடனமாட நடிகை திஷா பதானி சம்மதம் தெரிவித்திருக்கிறார்.' என்றனர். 

இதனிடையே நடிகை சாய் பல்லவி நடிப்பில் மற்றும் நடனத்தில் வெளியான மூன்று பாடல்கள் மில்லியன் கணக்கிலான பார்வைகளைப் பெற்று, தனி சாதனை படைப்பதுடன், தயாரிப்பாளருக்கும் படக்குழுவினருக்கும் தனியாக வருவாய் ஈட்டித் தருகிறது. நடிகை திஷா பதானி இதையும் கணக்கில் எடுத்துக்கொண்டு கோடிக்கணக்கில் ஊதியத்தை பெற்று 'புஷ்பா' படத்தில் நடனமாட ஒப்புக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.