மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் ஒரே ரயில் பாதையில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

கோலாலம்பூரின், பெட்ரோனாஸ் இரட்டை கோபுரங்களுக்கு அருகே அமைந்துள்ள ரயில் சுரங்கப் பாதையொன்றிலேயே இந்த அனர்த்தம் அந் நாட்டு நேரப்படி திங்களன்று இரவு 8.45 மணியளவில் (12:45 GMT) இடம்பெற்றுள்ளது.

பழுதுபார்க்கப்பட்ட பின்னர் காலியாக இருந்த ரயில்களில் ஒன்று, அதே பாதையில் எதிர் திசையில் 213 பயணிகளுடன் பயணித்த மற்றொரு ரயிலுடன் நேருக்கு நேர் மோதியே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக மாவட்ட காவல்துறை தலைவர் மொஹமட் ஜைனல் அப்துல்லா கூறினார்.

குறைந்தது 47 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும், மேலும் 166 பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார்.

கே.எல்.சி.சி ரயில் நிலையத்திலிருந்து சுமார் 100 மீட்டர் (330 அடி) தொலைவில் உள்ள சுரங்கப்பாதையின் ஒரு பகுதியிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.