அமெரிக்கா ஜப்பானுக்கு தற்சமயம் பயணம் செய்ய வேண்டாம் என தனது பிரஜைகளுக்கு அறிவுறுத்தும் மிக தீவிரமான பயண வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகவதற்கு இன்னும் இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலப் பகுதியே உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை திங்களன்று ஜப்பானுக்கான நான்காம் நிலை பயண கட்டுப்பாடு ஆலோசனையை வெளியிட்டது. இந்த அறிவிப்பானது தற்சமயம் டோக்கியோ ஒலிம்பிக் தொடர்பான கேள்விகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

அதிகளவான கொவிட்-19 தொற்றுகள் காரணமாக டோக்கியோ மே 31 வரை அவசரகால நிலையில் உள்ளது. ஜூலை 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு எதிராக இணையத்தளங்களிலும், ஜப்பானியர்களிடமும் எதிர்ப்புகள் தொடர்ந்தும் எழுந்த வண்ணமே உள்ளன.

சர்வதேச ரசிகர்கள் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதால், அமெரிக்காவின் தற்போதைய பயண ஆலோசனை ஒலிம்பிக்கில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெளிவாக இல்லை.

உள்ளூர் பார்வையாளர்களை அனுமதிக்கலாமா என்பது குறித்து இதுவரை எந்த முடிவையும் ஜப்பான் அறிவிக்காத நிலையில் அந்த முடிவு அடுத்த மாதத்தில் எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.