(த வீக் இன் ஏசியாவுக்காக பிரணய் சர்மா)

சீனத்தூதுவரின் எச்சரிக்கை இந்தோ-பசிபிக் பாதுகாப்பில் டாக்காவிற்கு  சிறிய வீரர் என்ற  அந்தஸ்தைக் கொடுத்தது ஆச்சரியமாக இருந்தது.

சீனத்தூதுவரின் எச்சரிக்கை தெற்காசியாவில் செல்வாக்கு செலுத்துவதற்காக பெய்ஜிங்கிற்கும் புதுடில்லிக்கும் இடையிலான மூலோபாய போட்டியுடன் தொடர்புடையது என்று பார்வையாளர்கள் கூறுகின்றனர்

நாற்கர நாடுகளின் பாதுகாப்பு பேச்சுவார்த்தை எனப்படும் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட 'குவாட்' கூட்டணியில் பங்களாதேஷ் இணைந்து கொள்வதற்கு எதிராக இந்தவார ஆரம்பத்தில் சீனா எச்சரிக்கை அளித்திருந்தது. 

இந்தோ-பசிபிக் பாதுகாப்பில் டாக்காவை 'தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரர்' என்று கருதமுடியாத நிலையில் சீனாவின் பங்களாதேஷுக்கான எச்சரிக்கை தெற்காசிய ஆய்வாளர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. 

இந்திய வெளியுறவு சேவையில் 36 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்ட கன்வால் சிபல், “பங்களாதேஷூக்கு பயனுள்ள கடற்படை இல்லை. ஆகவே, அந்த நாட்டினால் கடல் பாதுகாப்பில் பங்களிப்புச் செய்ய முடியாது” என கூறினார். 

அவ்வாறான நிலையில் பங்களாதேஷை குவாட்டில் இணைந்து கொள்ளுமாறு அழைக்கப்பட்டமைக்கான எந்தவொரு தகவலையும் கேள்விப்படவில்லை' என்று குறிப்பிட்டார். 

அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகியவற்றை உள்ளடக்கிய குவாட்,  பிராந்தியத்தில் அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கின் மத்தியில் கடல், இணையம் மற்றும் பொருளாதார பாதுகாப்பு ஆகியவற்றில் நெருக்கமான ஒத்துழைப்பை உறுதி அளிப்பதையே இலக்காக கொண்டிருக்கின்றது. 

எனினும், பெய்ஜிங் இதனை புதிய பனிப்போரைத் தொடங்கக் கூடிய ஒரு 'குழுவாக' காண்பித்துள்ளதோடு, ஏனைய நாடுகளையும் உள்ளடக்குவதற்கான குழுவின் விரிவாக்கம் தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் பெய்ஜிங் அதிக அக்கறை கொண்டுள்ளது.

அதனடிப்படையில் “இந்தியா, சீனாவுடன்  மிக நெருக்கமாக வரக்கூடாது என்றும் சீனாவின் செலவில் முன்னெடுக்கப்படும் கிழக்கு நோக்கிய இணைப்புத் திட்டங்களை தடுத்துவிடக்கூடாது என்றும் கருதியே சீனா பங்களாதேஷை எச்சரித்துள்ளது” என்று சிபல் குறிப்பிடுகின்றார். 

இல்லினாய்ஸ் மாநில பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் பேராசிரியரான அலி ரியாஸ், கடந்த ஆண்டு அமெரிக்காவிலிருந்து வெளிப்பட்ட சமிக்ஞைகளைக் குறிப்பிட்டார். 

அமெரிக்காவின் அப்போதைய துணைச் செயலாளர் ஸ்டீபன் பீகன் டாக்காவுக்குச் சென்று வொஷிங்டனின் இந்தோ-பசிபிக் மூலோபாயத்தில் பங்களாதேஷின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

ஆகவே, சீன தூதரின் பங்களாதேஷுக்கான எச்சரிக்கை கருத்துக்கள், அந்நாட்டை குவாட்டில் இணைந்துகொள்வதற்கான எதிர்கால சாத்தியக்கூறுகளைத் முன்கூட்டியே தடுப்பதற்கான ஒரு நடவடிக்கையாகும் என்றும் அவர் கூறினார்.

அத்துடன் சீனா, பங்களாதேஷை அமெரிக்காவிற்கு மிக நெருக்கமாக சென்றுவிடாமலிருப்பதை எச்சரிக்கும் ஒரு வழியாகும் என்றும் சுட்டிக்காட்டினார். 

சீனாவின் தூதர் லி ஜிமிங், கடந்த திங்கட்கிழமை பங்களாதேஷ் மற்றும் சீன செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடுகையில், 

பங்களாதேஷ் குவாட்டில் பங்கேற்குமாயின், 'எங்கள் இருதரப்பு உறவை கணிசமாக பாதிக்கச் செய்யும்' என்பதை எவ்வாறு கூற முடியும் என்றும் ரியாஸ் கேள்வி எழுப்புகின்றார்.  

பங்களாதேஷின் வெளியுறவு அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமன் லியின் செய்தி 'வருந்தத்தக்கது' மற்றும் 'ஆக்கிரமிப்பு' என்று கூறியமை தொடர்பாகவும் ரியாஸ் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். 

'நாங்கள் ஒரு சுயாதீனமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடு. எங்கள் வெளியுறவுக் கொள்கையை நாங்கள் தீர்மானிக்கிறோம்' என்று வெளியுறவு அமைச்சர் மோமன் கூறினார், இந்த விடயத்தில் சீனா தலையிடக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார் என்பதையும் ரியாஸ் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதேவேளை, சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் கடந்த புதன்கிழமை நடைபெற்ற வழக்கமான ஊடகவியலாளர் சந்திப்பின் போது, பங்களாதேஷின் உள்விவகாரங்களில் சீனா தலையிடுவதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை என்று கூறார்.

மேலும் குவாட் பற்றிய எந்தவொரு கருத்துக்களும் உள்நாட்டு விவகாரங்கள் தலையீடுகள் அல்ல. அதுபற்றிய கருத்துக்கள் அரசியல் குழுக்களை எதிர்ப்பதை நோக்கமாகக் கொண்டவை என்று குறிப்பிட்டார். 

இந்தியா - சீனா இனத்துக்கான செல்வாக்கு

தெற்காசியாவில் உள்ள நாடுகளுடனான சீனாவின் இராணுவ மற்றும் முதலீட்டு உறவுகள் குறித்து இந்தியா நீண்ட காலமாக எச்சரிக்கையாக இருந்து வருகிறது.

இரு நாடுகளினதும் செல்வாக்கு மண்டலமாக பார்க்கப்படும் பகுதிகள், பகிரப்பட்ட எல்லையில் நடந்து வரும் சர்ச்சைகள் ஆகியன இரு தரப்பிற்கும் பரஸ்பர சந்தேகங்களை அதிகரிக்கச் செய்துள்ளன. 

சமீபத்திய ஆண்டுகளில், புதுடில்லி தனது 'அயலவர்களுக்கு முன்னுரிமை' வெளிவிவகாரக் கொள்கையின் கீழ் அயல் நாடுகளில் முதலீடுகளைச் செய்வதன் மூலம் ஒட்டுமொத்தமாக பிராந்திய உறவுகளை அதிகரிக்க முயன்றுள்ளது. 

குறிப்பாக பங்களாதேஷுடனான உறவுகள் மிக முக்கியமாக வளர்ந்துள்ளன. தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் நுழைவாயிலாக அதாவது 'அக்ட் ஈஸ்ட்' (ACT EAST) கொள்கையில் டாக்கா மிக முக்கியமான பங்கைக் கொண்டுள்ளது என்று புதுடில்லி கருதுகிறது.

ஜப்பானும் வடகிழக்கு பிராந்தியங்களின் அபிவிருத்தியில் ஆர்வமுள்ளதாக காண்பிப்பதோடு, சீனாவின் எல்லையாகவுள்ள மேற்படி வடகிழக்கு பகுதிகளை மேலும் சுதந்திரமாக செயற்படுத்துவதற்கு பங்களாதேஷ் இந்தியாவுடன் இணைந்து செயற்படுகிறது.

இதேவேளை, பங்களாதேஷை ஒரு முக்கியமான பங்காளியாகக் பெய்ஜிங் காண்கிறது என்று  ஆய்வாளர்கள் தெரிவித்தனர். 

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் தகவல்களின் படி 2016 முதல் 2020க்கு இடையில் சீனாவிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்த முதல் மூன்று நாடுகளில் டாக்காவும் காணப்படுகின்றது.

இந்தியா மற்றும் மியான்மாருடன் வங்காள விரிகுடாவை பகிர்ந்து கொள்ளும் பங்களாதேஷ், தன்னுடைய நாட்டின் கப்பற் துறைமுகத்தில் சீன போர்க் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை அனுமதிக்கலாம் என்று இந்திய இராணுவ ஸ்தாபனம் கவலைகக் கொண்டுள்ளது. 

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே அதிகமான சீனக் கப்பல்களை கண்டுபிடித்ததாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

ஆகவே பங்களாதேஷ் துறைமுக திட்டங்களில் சீனா இணைந்து செயற்படுவதானது இந்தியாவுக்கு தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதால் பங்களாதேஷும் சீனாவுடன் இணைந்து செயற்படுவதற்கு தயங்குகிறது என்பதை பெய்ஜிங் அறிந்திருப்பதாக சிபல் கூறினார்.

இது, இந்தியாவுக்கு மட்டுப்படுத்திய அளவிலும், சீனாவுக்கு அதிகமான வாய்ப்புக்களையும் வழங்கும் இலங்கையின் செயற்பாடுகளை போலல்லாது இருக்கின்றது.

இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டிலிருந்து 100 மைல் தொலைவில் அமைந்துள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தினை 2017ஆம் ஆண்டில் இலங்கை சீனாவுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கியது. இது இந்தியாவினுடைய பாதுகாப்புக்கான கவலைகளை எழுப்பியது. 

மிக சமீபத்தில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கான இந்தியா-ஜப்பான் திட்டத்தை நிராகரிக்க இலங்கை மேற்கொண்ட நடவடிக்கை, சீனாவின் உத்தரவில் அதனை மேற்கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மேலும் அச்செயற்பாடு இந்தியாவுக்கான எச்சரிக்கையையும் தூண்டியுள்ளது.

'இலங்கை செய்ததைப் போல பங்களாதேஷ் சீனாவுடன் எந்தவொரு துறைமுக ஒத்துழைப்பிலும் இணைந்து கொள்ளவில்லை என்றால் அது இந்தியாவுக்கு போதுமானதாக இருக்கும்' என்று சிபல் குறிப்பிடுகின்றார்.

சர்வதேச விவகாரங்கள் குறித்த அமெரிக்க சிந்தனைக் குழுவான அட்லாண்டிக் கவுன்சிலின் குடியுரிமை பெற்ற மூத்த உறுப்பினரான ரியாஸ், குவாட் பிரச்சினை குறித்து சீனத் தூதர் பகிரங்கமாக பேசியது ஆச்சரியமாக இருந்தாலும், அவர் கூறிய கருத்துக்களைப் பின்தொடர்கின்றபோது கடந்த மாதம் சீன பாதுகாப்பு அமைச்சர் வீ.ஃபெங்கேயின் விஜயமொன்று முக்கியத்தினைப் பெறுகின்றது.

சீன பாதுகாப்பு அமைச்சர் பங்களாதேஷுக்கு விஜயம் செய்ததோடு டக்காவில் வைத்து, தெற்காசியாவில் இராணுவ கூட்டணியை நிறுவ முயற்சிக்கும் நோக்கில் பிராந்தியத்திற்கு வெளியில் இருந்து வரும் சக்திகளுக்கு எதிராக இரு நாடுகளும் கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என பங்களாதேஷ் ஜனாதிபதி அப்துல் ஹமீதிடம் கூறியுள்ளார்.

டாக்காவிற்கு அருகிலுள்ள ஜஹாங்கிர்நகர் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் தொடர்பான பேராசிரியர் ஷாஹாப் என்னாம் கான், 'சீன தூதரின் கருத்துக்களை அச்சுறுத்தலாக பார்க்கவில்லை' என்று கூறினார்.

'பெய்ஜிங்கிற்கு டாக்காவின் நிலைப்பாடு தெரியும், எந்தவொரு பிராந்திய பாதுகாப்பு சீரமைப்புகளிலும் ஒரு பகுதியாக இருக்க டாக்காவிற்கு விருப்பமில்லை என்பதில் தெளிவாக உள்ளது' என்று அவர் கூறினார்.

ஆனால் இந்தியா-பசுபிக் மூலோபாயம் குறித்து பங்களாதேஷ் எந்த உறுதிப்பாடும் வழங்கவில்லை என்றாலும் சீனாவுடனான தனது உறவை முறித்துக்கொள்ள பங்களாதேஷ் விரும்பவில்லை என்பதால், டாக்கா உண்மையிலேயே ஹெட்ஜிங் என்று கூறினார்.

அதுமட்டுமன்றி பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசாங்கம் உள்நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தொடர்ந்து இறுக்கமாக நடக்கும் என்றும் அவர் கூறினார்.

கொரோனா தடுப்பூசிகளுக்கு பெய்ஜிங்கை, டாக்கா நம்பியிருப்பதற்கு மத்தியில், சீனக் தூதரின் குவாட் பற்றிய கருத்துக்கள் பகிரங்கமாக வெளியிட்டிருப்பது பொருத்தமானது என்று உணர்ந்ததாக ரியாஸ் கருதுகின்றார். 

இந்தியா உள்நாட்டில் பேரழிவுகரமான நிகழ்வுகளையும், தடுப்பூசி விநியோக பற்றாக்குறையையும் எதிர்கொண்டுள்ளதால், அதன் அண்டை நாடுகளுக்கு வாக்குறுதியளித்தபடி உரிய அளவுகளில் தடுப்பூசிகளை வழங்க முடியாமல் உள்ளது. 

இதனால் பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகள் சீனாவிடத்தில் தடுப்பூசிகளுக்கான உதவிகளைப் பெறுவதற்குரிய அணுகலைச் செய்துள்ளன. 

சீன நிறுவனமான சினோபார்மை உலக சுகாதார அமைப்பு (WHO) பாதுகாப்பானது, பயனுள்ளது என்று அங்கீகரித்த நிலையில் 500,000 சினோபார்ம் டோஸ்களை சீனா பங்களாதேஷுக்கு வழங்கியுள்ளது.

இந்தியாவில் காணப்படும் தற்போதைய கொரோனா நிலைமை சீனாவுக்கு நன்மையை அளித்துள்ளது. ஏனெனில் தடுப்பூசி விடயத்தில் டாக்கா புதுடில்லியை நம்ப முடியாது என்ற நிலைப்பாட்டில் உள்ளது. 

எனினும் உலக சுகாதார அமைப்பின் ஒப்புதலுக்குப் பிறகும் சீன தடுப்பூசிகளை பொதுமக்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்பது தெளிவாக இல்லாத நிலைமையே காணப்படுகின்றது என்றும் ரியாஸ் கூறினார்.