(எம்.மனோசித்ரா)
இலங்கையில் கொவிட் தொற்றால் மரணிப்போர் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகிறது. கடந்த 16 ஆம் திகதி முதல் நேற்று ஞாயிறுக்கிழமை வரையான ஒரு வாரத்தில் மாத்திரம் 277 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்றைய தினமும் 32 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன. இவ்வாறு உறுதிப்படுத்தப்பட்ட மரணங்கள் ஏப்ரல் 23 ஆம் திகதி முதல் நேற்று ஞாயிறுக்கிழமை ஏற்பட்டவையாகும்.

மாத்தளை, கொட்டுகொட, நாரங்கொட, ஹசலக்க, காலி, பாணந்துறை, பொலன்னறுவை, போஹகும்புர, இமதுவ, மாவனல்ல, காத்தான்குடி, ஹவாஎலிய, பன்னிபிட்டி, கந்தானை, மினுவாங்கொடை, கலவான மற்றும் மஹரகம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 42 - 91 வயதுக்கு இடைப்பட்ட 20 பெண்களும் ,

நீர்கொழும்பு, பதுளை, கல்எலிய, அலவ்வ, களுத்துறை, கட்டுகித்துல்ல, எந்தேரமுல்ல, ஹட்டன், மஹரகம, ருவன்வெல்ல, மத்துகம மற்றும் நுகேகொட ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 28 - 86 வயதுக்கு இடைப்பட்ட 12 ஆண்களும் இவ்வாறு கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர். அதற்கமைய இலங்கையில் கொவிட் தொற்றால் மரணித்தோர் எண்ணிக்கை 1,210 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை நேற்று ஞாயிற்றுக்கிழமை 2,959 பேருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டது. இவர்களில் 14 பேர் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்களாவர். நேற்றைய தினமும் கொழும்பிலேயே அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இம்மாவட்டத்தில் பதிவான தொற்றாளர் எண்ணிக்கை 554 ஆகும். இதே போன்று கம்பஹாவில் 391, காலியில் 198, அநுராதபுரத்தில் 179, களுத்துறையில் 174, நுவரெலியாவில் 167, புத்தளத்தில் 152, இரத்தினபுரியில் 151,  மாத்தறையில் 134, மாத்தளையில் 125, கண்டியில் 105 மற்றும் கேகாலையில் 103 என தொற்றாளர் எண்ணிக்கை பதிவாகியது. ஏனைய மாவட்டங்களிலிருந்து 512 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.