பெப்ரவரி 1 சதித்திட்டத்தில் மியான்மரின் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஆங் சான் சூகி திங்களன்று நீதிமன்ற விசாரணைக்காக நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரது அரசாங்கம் இராணுவத்தால் தூக்கியெறியப்பட்ட பின்னர், அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டமை இது முதல் சந்தர்ப்பமாகும் என அவரது வழக்கறிஞர் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்போது சூகி நல்ல உடல்நலத்துடன் இருந்ததாகவும், விசாரணைக்காக சுமார் 30 நிமிடங்கள் தனது சட்டக் குழுவுடன் நேருக்கு நேர் சந்திப்பு நடத்தியதாகவும் அவரது வழக்கறிஞர் கூறினார்.

"தனது மக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று சூகி விரும்புவதாகவும், மக்கள் இருக்கும் வரை ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி இருக்கும் ஏனெனில் இது மக்களுக்காக நிறுவப்பட்டது" என்று சூகி கூறியதாகவும் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

நாட்டில் ஜனநாயகத்தை கட்டியெழுப்புவதற்கான தனது நீண்ட போராட்டத்திற்காக அமைதிக்கான நோபல் பரிசு பரிசு பெற்ற 75 வயதான சூகி, ஆட்சி மாற்றத்தின் பின்னர் தடுத்து வைக்கப்பட்டுள்ள 4,000 க்கும் மேற்பட்ட மக்களில் ஒருவர். 

சட்டவிரோதமாக வாக்கி-டாக்கி ரேடியோக்களை வைத்திருப்பது முதல் அரச ரகசியங்கள் சட்டத்தை மீறுவது மற்றும் தேர்தல் மோசடி வரையிலான குற்றச்சாட்டுகளை அவர் எதிர் கொண்டுள்ளார்.