(செ.தேன்மொழி)

2020 ஆண்டு உயர்தர பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பங்களை அனுப்பும்போது, கிராம சேவகர் மற்றும் பாடசாலைகளில் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள தேவையில்லை என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

2020 ஆண்டு உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவங்கள் எதிர்வரும் ஜூன் மாதம் 11 ஆம் திகதி இரவு 12 மணிவரையில் ஏற்றுக்கொள்ளப்படும்.

இதன்போது மாணவர்கள் பாடசாலை மற்றும் கிராமசேவகரிடம் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவையில்லை.

கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக நாடளாவிய ரீதியில் போக்குவரத்து கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளதனால், மாணவர்கள் இந்த சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்கு முடியாமல் உள்ளது. 

அதனால் அவ்வாறு எந்தவொரு சான்றிதழ்களையும் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. தங்களிடம் உள்ள சான்றிதழ்களின் பிரதிகளை மாத்திரம் விண்ணப்பத்துடன் அனுப்பி வைக்க முடியும். அவ்வாறு இல்லாவிட்டால் , விண்ணப்பத்தை மாத்திரம் அனுப்ப முடியும். 

இதன்போது விண்ணப்பங்கள் அனைத்து இணையத்தள ஊடாக மட்டுமன்றி அதன் பிரதிகள் மின்னஞ்சல் , தபால் சேவை ஊடாகவும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும்.

பாடசாலை ஊடாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் உரிய பாடசாலையின் அதிபரின் கையொப்பத்தையும்,  தனிப்பட்ட முறையில் விண்ணப்பிப்பவர்கள் உரிய கிராம சேவகரிடமும் கையொப்பம் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், இம்முறை இதற்கான அவசியம் இல்லை.  

போக்குவரத்து கட்டுப்பாடு நீக்கப்பட்டதன் பின்னர் இந்த சான்றிதழ்களை பெற்றுக் கொடுப்பதற்காக மாணவர்களுக்கு மூன்றுவாரம் காலவகாசம் வழங்கப்படும். இந்த காலப்பகுதியில் உரிய சான்றிதழ்களை மாணவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு வழங்க முடியும்.  

இதன்போது விண்ணப்பதாரிகளின் பெயர் தொடர்பான சிக்கல்கள் காணப்பட்டால், அதற்கான சத்திய கடதாசியை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. 

அதனால் தகுதியுடைய மாணவர்கள் அனைவரும் விண்ணப்பங்களை பூர்த்திசெய்து இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்க முடியும். தற்போது உயர்கல்வி அமைச்சு, கல்வி அமைச்சுடன் இணைந்து செயற்பட்டு வருவதனால் மாணவர்களின் பரீட்சை சுட்டெண்ணை கொண்டு அவர்களின் பெறுபேறுகளை உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும்.

இதேவேளை, இணையவழி கற்கையின்போது அதிகளவான மாணவர்கள் இணைந்துக் கொள்வதால், தற்போது கற்கை நெறிகள் மட்டுமன்றி பரீட்சைகளும் இணையவழி ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய புதிதாக இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களுக்கும் இணையவழி கற்கைகளை முன்னெடுக்க முடியும்.