(எம்.எப்.எம்.பஸீர்)
அண்மையில்  அம்பாறை - வலகம்புர பகுதியில்  உயிரிழந்த கொரோனா தொற்றுக்குள்ளான இளைஞனின் மரணத்துக்கு, இந்தியாவில் பரவி வரும் கறுப்பு பூஞ்சை நோய்  காரணமல்ல என மிகத் தெளிவாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அம்பாறை பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் உபுல் விஜேநாயக்க உறுதிப்படுத்தினார்.

 குறித்த நபர் இந்தியாவில் கொரோனாவை தொடர்ந்து பரவும் ஊடகங்களிலும் சமூக வலைத் தளங்களிலும் கறுப்பு பூஞ்சை நோய்  காரணமாக உயிரிழந்துள்ளதாக பரவலாக செய்திகள் பரிமாற்றப்பட்டு வரும் நிலையிலேயே வைத்திய அத்தியட்சர்  உபுல் விஜேநாயக்க இதனை குறிப்பிட்டார்.

 இது தொடர்பில் வைத்திய அத்தியட்சர் உபுல் விஜேநாயக்க தெளிவுபடுத்துகையில்,

'குறித்த நோயாளி, அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது, காச நோயினால் பாதிக்கப்பட்டு அதன் உச்ச கட்டதை அடைந்திருந்தார். பல காலமாக அவர் காச நோய்க்கான சிகிச்சைகளைப் பெற்றிருக்காத  நிலையிலேயே  அவ்வாறான கவலைக்கிடமான நிலையை அவர் அடைந்திருந்தார். சிகிச்சைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு அழைத்து வரப்படும் போதும் அவர் மயக்க நிலையில் இருந்தார்.

அவருக்கு முன்னெடுக்கப்பட்ட என்டிஜன் பரிசோதனையின் போதே கொரோனா தொற்றாளர் என  அடையாளம் காணப்பட்டார். அப்போதும் அவரது மூளையில் ஒரு வகை பூஞ்சை பரவியிருந்தது. அவருக்கு அது தொடர்பில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. எனினும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அவரது மரணத்துக்கு காரணம்,  இந்தியாவில் பரவிவரும் கறுப்பு பூஞ்சை நோய் அல்ல. இலங்கையில் பூஞ்சை நோய் பலவருடங்களாக பதிவாகியுள்ளன. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு பூஞ்சை நோய்களால் அதிக ஆபத்து ஏற்படும்.

 வருடத்துக்கு இவ்வாறான நோயாளிகள் மூன்று நான்கு பேர் எமது வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக வருவார்கள். காச நோய் காரணமாக ஏற்பட்ட ஒரு வகை பூஞ்சை மூளையை தாக்கியதால் குறித்த மரணம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பில் ஆராய்ந்த நுண்ணுயிரியல் விஷேட வைத்திய நிபுணர் உபுல் பிரியதர்ஷன அதனை உறுதி செய்தார்.

உயிரிழந்த குறித்த  நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த போதும், அவரது மரணத்துக்கான காரணம் கொரோனா தொற்று அல்ல. காச நோய் காரணமாக ஏற்பட்ட பூஞ்சை (ஈஸ்ட் எனும் பங்கசு) மூளையை தாக்கியதே மரணத்துக்கான காரணம். காச நோய்க்கு சிகிச்சைப்  நீண்ட நாட்களாக சிகிச்சைப் பெறாமல் இருக்கும் போது இவ்வாறான நிலைமைகள் ஏற்படலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறித்தவர்களையே பூஞ்சைகள் விரைவில் தாக்கும்.' என வைத்திய அத்தியட்சர் உபுல் விஜேநாயக்க கூறினார்.