(செ.தேன்மொழி)

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், புத்தளம் நகர சபைத் தலைவருமான அப்துல் பாயிஸின் மரணம் தொடர்பாக மூவரை புத்தளம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் அவரது வாகன சாரதி உட்பட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

புத்தளம் நகரசபையின் தலைவர் கே.ஏ.பாயிஸ் நேற்று மாலை 5.30 - 6.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்ற விபத்தின் போது உயிரிழந்துள்ளார். 

நகர சபை தலைவர் , சிலருடன் ரால்மடுவ குளத்தில் நீராடி பின்னர் , தனது கெப் ரக வாகனத்தின் பின்பகுதியில் அமர்ந்து பயணித்துள்ளார். இதன் போது வாகனத்திலிருந்து தூக்கி எரியப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் கெப் வாகனத்தின் சாரதியும் அதில் பயணித்த மேலும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் விபத்தின் போது மது போதையில் இருந்துள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ள நகரசபை தலைவர் பாயிஸின் மரண பரிசோதனைகள் நிறைவுபெற்ற பின்னரே மரணத்திற்கான காரணம் அறிவிக்கப்படும். 

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் மற்றும் வாணாத்தவில்லு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் என்றார்.