சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறியமைக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரப் பகுதியில் 636 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்காக ஒரே நாளில் அதிகளவான கைதுகள் இடம்பெற்றுள்ளமை இதுவே நாட்டில் முதல் சந்தர்ப்பமாகும்.

கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக மொத்தம் 12,748 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறும் நபர்களை அடையாளம் காண நேற்று கொழும்பு மாவட்டத்தின் மாளிகாவத்தை, வாழைத்தோட்டம் மற்றும் கிராண்ட்பாஸ் பகுதிகளில் பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் சிறப்பு ட்ரோன் கமரா நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.

இதன்போது தனிமைப்படுத்தல் உத்தரவினை மீறிய 27 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த ட்ரான் கமரா நடவடிக்கை இன்றும் மேற்கொள்ளப்படவுள்ளது.