(எம்.மனோசித்ரா)

இந்தியாவில் தற்போது பரவிக் கொண்டிருக்கும் பிளக் பங்கசு எனப்படும் கறுப்பு பூஞ்சை நோய் மிகவும் ஆபத்தானதாகும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை அதிகமாக தாக்கும் இந்த நோயால் 50 வீதம் மரணம் ஏற்படக் கூடிய வாய்ப்புள்ளது. 

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் 4 மணித்தியால பணி பகிஷ்கரிப்பு | Virakesari.lk

இலங்கையில் இந்நோய் பரவியுள்ளமை இது வரையில் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படாத போதிலும், இந்தியா எமக்கு அண்டை நாடு என்பதால் பரவக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக்குழு மற்றும் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் இரத்தினசிங்கம் தெரிவித்தார்.

இந்தியாவில் தற்போது பரவிக் கொண்டிருக்கும் பிளக் பங்கசு நோயால் பாதிக்கப்பட்ட நபரொருவர் இலங்கையின் அம்பாறையில் இனங்காணப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் வினவிய போதே வைத்தியர் வாசன் இரத்தினசிங்கம் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெளிவுபடுத்துகையில்,

பிளக் பங்கஸ் நோயானது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை இலகுவாக தாக்கக் கூடியதாகும். இது ஒருவரிலிருந்து பிரிதொரு பரவும் தன்மை கொண்டது. எமக்கு அயல் நாடான இந்தியாவில் இந்த நோயும் தீவிரமாகப் பரவி வருகிறது. 

இலங்கையில் இந்நோயால் பாதிப்பு தொடர்பில் இதுவரையில் உத்தியோகபூர்வமான தரவுகள் எமக்கு கிடைக்கப்பெறவில்லை. ஆனால் இந்தியா எமக்கு மிகவும் அயல் நாடு என்பதால் இலங்கையில் பரவக் கூடிய வாய்ப்புக்கள் மிக அதிகமாகவே காணப்படுகிறது.

கொவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைகிறது. அதனால் தான் இந்தியாவில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பிளக் பங்கஸ் நோய் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது.

இருந்த போதிலும் இந்த பங்கஸானது கொவிட் தொற்றின் காரணமாகப் பரவுகிறதா அல்லது வேறு காரணிகள் இதில் தாக்கம் செலுத்துகின்றதா என்பதில் இந்தியா குழப்பமடைந்துள்ளது.

'மிகோ மைகோஸிஸ்' எனப்படும் பங்கசினால் இந்த நோய் பரவுகிறது. கொவிட் தொற்றுக்கு மத்தியில் ஏனைய நோய்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமை இலங்கையிலும் ஏற்படக் கூடிய வாய்ப்புக்களுள்ளது. எனவே இது தொடர்பில் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

இந்த நோயின் அறிகுறிகளாக கண்கள் வீங்குதல், கண் மடல்கள் வீங்குதல், முகத்தில் பழுக்கள் ஏற்படல், வாயில் தொற்று ஏற்படல் என்பனவாகவுள்ளன. இவ்வாறான நோய்கள் தொடர்பிலும் அவதானத்துடன் இருக்க வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர். இனி வரும் காலங்கள் மிகவும் தீர்க்கமானவை என்றார்.