கொரோனாவை விரட்டும் 'பொசிட்டிவ்' சிந்தனை

By Gayathri

23 May, 2021 | 08:25 PM
image

இன்றைய சூழலில் மக்களில் பெரும்பாலானவர்கள் கொரோனாத் தொற்று பாதிப்பு காரணமாக எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொண்டு, தொற்றிலிருந்து மீள முடியாமல் தவிப்பதாக உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். 

'கொரோனா பொசிட்டிவ்' என பரிசோதனை முடிவுகள் வந்தாலும், எண்ணங்களில் பொசிட்டிவான (நேர்மறை) சிந்தனைகளை வளர்த்துக் கொண்டால், இந்த பாதிப்பிலிருந்து மீளலாம் என்றும் உளவியல் நிபுணர்கள் எடுத்துரைக்கிறார்கள்.

கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. மேலும் கொரோனா பற்றிய அண்மைய தகவல்களை, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக தொலைக்காட்சி, இணையதளம், வாஸ்ஸப், ஃபேஸ்புக் உள்ளிட்ட இலத்திரனியல் ஊடகங்களின் மூலம் தொடர்ச்சியாக தெரிந்துகொள்கிறார்கள். 

இதனால் மக்கள் மத்தியில் பீதியும், எதிர்காலம் குறித்த அச்சமும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றைப் பொறுத்தவரை இருவிதமான மனநிலையில் இருப்பவர்கள்தான் அதிகம். 

எமக்கெல்லாம் கொரோனாத் தொற்று வராது என்று அசாதாரணமான துணிச்சலுடன் இருப்பவர்கள் ஒரு பிரிவினர். இதற்கு நேர்மாறாக கொரோனா குறித்து அதீத பயத்துடனும், நம்பிக்கையின்மையாலும் பதற்றமடைந்து, எப்படி எதிர்வினையாற்றுவது என தெரியாமல் புலம்புவார்களாகவும், குழம்புபவர்களாகவும் மற்றொரு பிரிவினர் இருக்கிறார்கள். 

இந்தநிலையில் எம்மில் பலரும் இதுதொடர்பான மனநிலையை சமன்படுத்தி கொள்வதுதான் முக்கியமானது மற்றும் முதன்மையானது.

கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு, மருத்துவரின் அறிவுரைப்படி மருந்து மாத்திரைகளையும், சத்தான உணவு மற்றும் பூரண ஓய்வு எடுக்க வேண்டும். 

தொடர் காய்ச்சல் அல்லது இருமல் இருந்தால் உடனே வைத்தியசாலையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும். இதுபோன்ற தருணத்தில் எதிர்மறையான எண்ணங்களை முழுமையாக அகற்றி, நேர்மறையான எண்ணங்களை வீரியமாக வளர்த்துக் கொண்டால் விரைவில் குணமடையலாம்.

அதே தருணத்தில் கொரோனா பற்றிய அண்மைய தகவல்களை தொடர்ச்சியாக தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டாதீர்கள். அதற்கு மாற்றாக எம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவினையும், தன்னம்பிக்கை சார்ந்த வாசிப்பினையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இவைதான் இவற்றிலிருந்து விரைவாக மீள உதவும்.

டொக்டர் காமினி
தொகுப்பு அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right