எம்.மனோசித்ரா

நாட்டில் எதிர்வரும் 25, 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் கொவிட் நிலைவரம் எவ்வாறுள்ளது என்பதை மதிப்பீடு செய்து போக்குவரத்து கட்டுப்பாடுகளை தொடர வேண்டுமா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அத்தோடு எதிர்வரும் 25 ஆம் திகதி செவ்வாய்கிழமை போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் போது உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் தவிர்ந்த ஆடை விற்பனை நிலையங்களை திறப்பது அநாவசியமானது என்றும் இராணுவத்தளபதி சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு போக்குவரத்து கட்டுப்பாடு தளர்த்தப்படும் போது பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறும் அவர் நாட்டு மக்களை கேட்டுக் கொண்டார்.

நாட்டில் கொவிட் நிலவரம் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் போது இதனைத் தெரிவித்த இராணுவத்தளபதி மேலும் குறிப்பிடுகையில் ,

25, 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் நாட்டில் கொவிட் நிலைவரம் எவ்வாறுள்ளது என்பதை மதிப்பீடு செய்து போக்குவரத்து கட்டுப்பாடுகளை தொடர வேண்டுமா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும்.

மக்கள் வீடுகளிலேயே என்பதை இலக்காக் கொண்டே இவ்வாறு நாடளாவிய ரீதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

மக்கள் ஆயத்தமாக வேண்டும் என்பதற்காகவே இரு கட்டங்களாக போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக 4 நாட்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டது.

அதற்கேற்ப மக்கள் தயாராகியிருப்பர் என்று எண்ணுகின்றோம். எனவே 25 ஆம் திகதி போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் மக்கள் அனைவரும் வெளியில் வந்து வழமையைப் போன்று சாதாரணமாக நடமாட இடமளிக்க எதிர்பார்க்கவில்லை.

எனவே 25 ஆம் திகதி சகல கடைகளை திறப்பதற்கான அவசியம் இல்லை.

அதாவது ஆடை விற்பனை நிலையங்கள் உள்ளிட்டவற்றை திறப்பது அநாவசியமானதாகும்.

எனவே உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் உள்ளிட்டவற்றை மாத்திரம் திறப்பது பொறுத்தமானதாகும்.

இது தொடர்பில் பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. எனவே வழங்கப்பட்டுள்ள வாயப்பை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று மக்களை கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.