இலங்கையில் நீதிவழங்கலுக்கு பொறுப்புக்கூறல் அவசியம் : அமெரிக்கா, கனடா வலியுறுத்து

By Gayathri

21 May, 2021 | 08:21 PM
image

இலங்கையில் நீதிவழங்கலுக்கு பொறுப்புக்கூறல் பொறிமுறை அவசியம் என்று அமெரிக்கா மற்றும் கனடா ஆகியன தனித்தனியாக வலியுறுத்தியுள்ளன. 

யுத்தம் நிறைவடைந்து 12 ஆண்டுகள் கடந்துள்ளமையை குறிக்கும் வகையில் ஐக்கிய அமெரிக்காவின் வெளிவிவகார குழு தமது டுவிட்டர் பதிவு ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளது.

அப்பதிவில், யுத்தம் நிறைவடைந்து 12 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், யுத்தத்தில் பலியானோரை நினைவுக்கூருவதுடன், அர்த்தமுள்ள நீதியும், பொறுப்புக்கூறலும் அவசியமாகும். 

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சட்டங்களில் இருந்து தப்பிக் கொள்கின்ற நிலைமை தொடர்கின்றமையானது, நல்லிணக்க முயற்சிகளை பெரிதும் பாதித்துள்ளது.

இந்தவிடயங்களை உள்ளடக்கி கடந்த ஜனவரியில் ஐக்கிய நாடுகளது மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கைக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதுடன், மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் நிறைவேற்றப்பட்ட 46/ 1 பிரேரணையின் அமுலாக்கத்தை மீண்டும் வலியுறுத்தப்படுகின்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதேவேளை, கனேடிய பாராளுமன்றத்தின் பொதுச்சபையின் வெளிவிவகாரக் குழுவின் டுவிட்டர் பக்கத்தில், இலங்கையில் பல தசாப்த கால உள்நாட்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 12 ஆண்டுகளாகியுள்ள நிலையில்,  பாதிக்கப்பட்டவர்களையும் தப்பிப்பிழைத்தவர்களையும் நாங்கள் நினைவில் வைத்துக்கொள்கிறோம்.

அத்துடன், அர்த்தமுள்ள நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான அவர்களின் தேவையை ஆதரிக்கிறோம். மனித உரிமை மீறல்களுக்கு தண்டனை விதிக்கப்படாமையானது, நல்லிணக்க முயற்சிகளுக்கு தொடர்ந்து தடையாக உள்ளது.

இலங்கையில் மோசமடைந்து வரும் நிலைமைகள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் கடந்த ஜனவரியில் வெளியிட்ட அறிக்கையின் கரிசனைகளை பகிர்ந்து கொள்வதுடன், மாற்றுப் பொறிமுறைக் குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகரால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு அமெரிக்கா மற்றும் ஏனைய பங்காளர்களுடன் ஆதரவு அளிக்கிறோம்” என்றும் கூறப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right